21 ஜனவரி 2009
நாட்டுப்புற சடுகுடு(கபடி) பாட்டு - 14
1.
சக்கு சக்குடி -சரு வொலாக்கைடி
குத் தொலக்கைடி -குமரன் பெண்டாண்டி
பாளயத்திலே வாழ்க்கைப்பட்ட
பழனி பெண்டாட்டி.
2.
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புளே
அரைக்காசு வெற்றிலைக்குக்
கதிகெட்ட மாப்பிளை.
3.
குத்துலக்கை –கோலிக்குண்டு
வச்செடுத்தான் –வாரிக்கொள்வான்
தப்பைதாளம் –ஏந்திஇறக்கி
ஏந்தின கையிலே சொக்கி
4.
கவானைக் சுவட்டி சுவட்டி சுவட்டி
பலிஞ் சடுகுடு .....................
5.
பலிஞ் சடுகுடு அடிப்பானேன் ?
பல்லு ரெண்டும் போவானேன் ?
உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்
ரெண்டுபணம் தண்டம் தண்டம் தண்டம்.
6.
தூதூ நாயக்குட்டி -தொட்டியத்து நாய்க்குட்டி
வளைச்சுப் போட்டா –நாய்க்குட்டி
இழுத்துப் போட்டா –நாய்க்குட்டி
நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி
7.
கிக்கீக்குங் கம்பந் தட்டை
காசுக்கு ரெண்டு சட்டை
கருணைக் கிழங்கடா
வாங்கிப் போட்டா வாங்கிப் போட்டா.
8.
அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை
கல்லிலே போட்டால் கரைக் குடுக்கை
சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை....
9.
அந்த அரிசி இந்த அரிசி
நேத்துக் குத்தின கம்பரசிகம்பரிசி
கம்பரிசி கம்பரசி
10.
கருணைக் கிழங்கடா வாழைப் பழமடா
தோலை உரியடா தொண்டைக்குள் அடையடா
அடையடா அடையடா அடையடா
11.
கீச்சுக் கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சுடா
பட்டுப் போச்சுடா பட்டுப் போச்சுடா
12
கொத்துக் கொத்து ஈச்சங்காய்
கோடாலி ஈச்சங்காய்
மதுரைக்குப் போனாலும்
வாடாத ஈச்சங்காய்
ஈச்சங்காய் ஈச்சங்காய்.
நாட்டுப்புற கண்ணாமூச்சி பாட்டு - 13
கண்ணாம் கண்ணாம் பூச்சாரே
காது காது பூச்சாரே
எத்தனை முட்டை இட்டாய்?
மூணு முட்டை.
முணு முட்டையுந் தின்னுப்புட்டு
ஒருசம்பா முட்டை கொண்டுவா
கண்ணாமூச்சி-2
தத்தக்கா புத்தக்கா -தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா -பச்சைமரத்திலே பதவலை கட்டப்
பன்றிவந்து சீராடப் -பறையன் வந்து நெல்லுக்குத்த
குண்டுமணி சோறாக்கக்-குருவிவந்து கூப்பிடுது.
நாட்டுப்புற வினா விடை பாட்டு - 12
ஓடு ஓடு
என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளiப்பால்.
என்ன கள்ளi ? சதுரக்கள்ளi.
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.
2.வேர் வேர்
என்ன வேர் ? வெட்டிவேர்.
என்ன வெட்டி ? பனைவெட்டி.
என்ன பனை? தாளiப்பனை.
என்ன தாளi? விருந்தாளi.
என்ன விருந்து? மணவிருந்து.
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.
3. ஆண்டி ஆண்டி
ஆண்டி ஆண்டி
என்ன ஆண்டி? பொன்னாண்டி.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? பூஅண்டம்
என்ன பூ? பனம்பூ
என்ன பனை? தாளiப்பானை
என்ன தாளi? நாகதாளi
என்ன நாகம்? சுத்தநாகம்
என்ன சுத்தம்? வீட்டுச் சுத்தம்
என்ன வீடு? ஓட்டுவீடு
என்ன ஓடு? பாலோடு
என்ன பால்? நாய்ப்பால்
என்ன நாய்? வேட்டைநாய்
என்ன வேட்டை? பன்றிவேட்டை
என்ன பன்றி? ஊர்ப்பன்றி
என்ன ஊர்? கீரையூர்
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பள்ளiயறை
என்ன பள்ளi? மடப்பள்ளi
என்ன மடம்? ஆண்டிமடம்
என்ன ஆண்டி? பொன்னாண்டி
4.
நீ எங்கே போனாய்?
ஊருக்குப் போனேன்.
என்ன ஊர்? மயிலாப்பூர்
என்ன மயில்? காட்டுமயில்
என்ன காடு? ஆறுகாடு
என்ன ஆறு? பாலாறு
என்ன பால்? கள்ளiப்பால்
என்ன கள்ளi? இலைக்கள்ளi
என்ன இலை? வாழைஇலை
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரசக்கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம்
என்ன மிளகு? வால்மிளகு
என்ன வால்? நாய்வால்
என்ன நாய்? மரநாய்
என்ன மரம்? பலாமரம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? பனைவெட்டி
என்ன பனை? தாளiபனை
என்ன தாளi? விருந்தாளi
என்ன விருந்து? நிலாவிருந்து
என்ன நிலா? பிறைநிலா
என்ன பிறை? நெற்றிப்பிறை
என்ன நெற்றி? பெண்நெற்றி
என்ன பெண்? மணப்பெண்
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.
குழந்தைகளுக்கான நிலா பாட்டு - 11
வித்திலா மலேவிளைந்த வெண்ணிலாவே – நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்வாய் வெண்ணிலாவே
அந்தரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே-அவர்
ஆடும்வகை யெப்படியோ வெண்ணிலாவே ?
ஞானமய மாய்விளக்கும் வெண்ணிலாவே –என்னை
நானறியச் சொல்லுகண்டாய வெண்ணிலாவே –
அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலாவே –எங்கள்
ஐயர்வரு வாரோசொல்வாய் வெண்ணிலாவே –
ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே –அருளாளர்
வரு வாரோசொல்லாய்,வெண்ணிலாவே.
1.
நிலாநிலா வாவா
நில்லாமே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா.
நடுவீட்டில் வையே
நல்ல துதி செய்யே
வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு
அள்ளியெடுத்து அப்பன் வாயில்
கொஞ்சிக் கொஞ்சி யூட்டு
குழந்தைக்குச் சிரிப்புக் காட்டு
2.
எட்டிஎட்டிப் பார்க்கும்
வட்ட வட்ட நிலாவே
துள்ளித்துள்ளிச் சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே.
3.
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
4.
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட.
சிறுவர்களுக்கான பாடல்கள் (காக்கா பாட்டு) - 10
கண்ணுக்கு மை கொண்டுவா
குருவி குருவி
கொண்டைக்குப் பூக்கொண்டுவா
கிளியே கிளியே
கிண்ணத்தில் பால் கொண்டுவா
கொக்கே கொக்கே
குழந்தைத் தேன் கொண்டுவா
அப்பா முன்னே வாருங்கள்
அழாதே யென்று சொல்லுங்கள்
சிறுவர்களுக்கான பாடல்கள் (தோல் வீசுதல்) - 9
சுந்தரக் கிளியே தோள்வீசு
பச்சைக் கிளியே தோள்வீசு
பவளக் கொடியே தோள்வீசு
திண்ணையின் கீழே தவழ்ந்து விளையாடும்
தேனே மணியே தோள்வீசு
சிறுவர்களுக்கான பாடல்கள் (கை வீசுதல்) - 8
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
அப்பம் வாங்கலாம் கைவீசு
அமர்ந்து தின்னலாம் கைவீசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி யுண்ணலாம் கைவீசு
பழங்கள் வாங்கலாம் கைவீசு
பரிந்து புசிக்கலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு
தேரைப் பார்க்கலாம் கைவீசு
திரும்பி வரலாம் கைவீசு
கம்மல் வாங்கலாம் கைவீசு
காதில் மாட்டலாம் கைவீசு.
சிறுவர்களுக்கான பாடல்கள் (சாய்ந்தாடுதல்) - 7
சாயக் கிளiயே சாய்ந்தாடு
அன்னக் கிளiயே சாய்ந்தாடு
ஆவாரம் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளiயே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.

