Powered By Blogger

28 மார்ச் 2013

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!


பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும். 
அந்த வகையில் வெள்ளைபடுதல், மலச்சிக்கல், மாதவிடயாயின் போது ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பெண்களின் தசைகள் இறுக்கமாக எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொடுக்கவல்ல "எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது" பற்றி பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். 

தேவையான பொருட்கள்:
*எள்ளு- 150-200g எள்ளு (Sesame Seeds)
*ஒரு முழுத் தேங்காயின் துருவிய தேங்காய்ப் பூ. (Coconut Powder)  
*வெல்லக் கட்டி & சர்க்கரை: (Jaggery Cube)
*சிறிதளவு சர்க்கரை (Sugar) 

இனி எள்ளு உருண்டை எப்படிச் செய்வது- செய்முறை! 

*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.

*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.

*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).

*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.

*இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார். 

*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.

*போத்தலினுள் இந்த எள்ளுருண்டையினைப் பொதி செய்தால் இரண்டு வாரங்கள் வரை பழுதாகாது வைத்திருந்து நீங்கள் உண்டு மகிழலாம்.


இது தான் எள்ளு உருண்டை செய்வதற்கான ரெசிப்பி. ஸோ உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் நீங்கள் கேட்கலாம். 

முக்கிய குறிப்பு: எள்ளு உருண்டையில் தேங்காய்ப்பூ, வெல்லக் கட்டி முதலிய இனிப்பு - கொழுப்புத் தன்மை வாய்ந்த பதார்த்தங்கள் சேர்க்கப்படுவதால் நீரிழிவு நோயுள்ளோர் தவிர்ப்பது நல்லது.

28 ஜனவரி 2013

மரணத்திற்கு பின்னால்

 
 
கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) INTRODUCTION:

                 வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ஆன்மஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. ( வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறை கூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகை புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.........ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்........அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர், ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்) பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி.)

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கவுசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார், 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

வேதம்-உபநிஷதம்

ரிக்- ஐதரேய, கவுசீதகி

யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண

சாம-கேன, சாந்தோக்கிய

அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய

யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் தேவம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் உள்ளது. கடர் என்ற முனிவர் இதை அருளியதால் கட உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

கட உபநிஷதத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் மூன்று அத்தியாயங்கள், இரண்டாம் பகுதியில் மூன்று அத்தியாயங்கள். இந்த ஆறு அத்தியாயங்களிலுமாக 119 மந்திரங்கள் ( இன்றைய வழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம்(மனனாத் த்ராயதே இதி மந்த்ர) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன) உள்ளன.

பாரதத்தின் பண்டைய ஆச்சாரியர்களும் சரி, இன்றைய ஆச்சாரியர்களும் சரி கதைகள்மூலம் உயர் உண்மைகளைப் போதிப்பதில் நிகரற்று விளங்குகிறார்கள். அதற்கு முன்னோடியாகத் திகழ்பவை உபநிஷதங்கள். கட உபநிஷதத்திலும், உலகையே வெல்வதற்காக வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின்மூலம் உண்மை புகட்டப்படுகின்றன.

நசிகேதன் ஒரு சிறுவன், வாஜசிரவஸின் மகன். தந்தை, யாக நியதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை வாஜசிரவஸ் விரும்பாததால் அவன் எமதர்மனிடம் செல்ல நேர்ந்தது. எமதர்மனிடம் மூன்று வரங்கள் பெற்றான் அவன். மூன்று வரங்களின்மூலம் இந்த உபநிஷதத்தில் உயர் உண்மைகள் போதிக்கப்படுகின்றன.

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று; அதைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. மற்றொரு புதிர் மரணம். மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். சாஸ்திரங்களும் அதனைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கத்தான் செய்துள்ளன. ஆனாலும் மரணம் என்பது இன்றுவரை ஒரு புதிராகவே உள்ளது.

கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிஷம் கூறுகிறது(2.2). ஆனால் மரணத்தைப்பற்றி ஆராய்வதைவிட அதை வென்று அறுதி உண்மையை அடைவதே முக்கியம்; நம்மிடம் தரப்பட்டுள்ள வாழ்க்கையை உரிய முறையில் வாழ்வதே அதற்கு வழி என்று சுட்டிக் காட்டுகிறது இந்த உபநிஷதம்(உதாரணமாக 1.1.18)

வித்யைகள்: மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. ஆனால் தற்போது சுமார் 35 வித்யைகள். இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.

கட உபநிஷதத்தில் இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன 1. நசிகேத வித்யை(1.1.14 மற்றும் 1.3.2) 2. அங்குஷ்ட்ட மாத்ர வித்யை(2.1.12 மற்றும் 2.3.17). இந்த இரண்டு வித்யைகளும் இரண்டு படிகள் போல் அமைந்து, இறைவனை உணர்வதற்கான, மரணத்தை வெல்வதற்கான ஒரு பாதையாக விளங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மொழிபெயர்ப்பு: 1935-இல் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தற்போது வெளிவருகின்ற இந்த மொழிபெயர்ப்பு, கடஉபநதிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

1. தத்துவச் சிக்கல்கள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. உதாரணமாக, ஈசுவரன், பிரம்மம் போன்ற வார்த்தைகள் தத்துவரீதியாக பரம்பொருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பிடுபவை. இருப்பினும் தமிழில் இறைவன் போன்ற பொதுப்பதங்களையே பயன்படுத்தியுள்ளோம். இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. அதுபோலவே காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

அமைப்பு: ஒவ்வொர் அத்தியாயத்திலும் முதலில் அந்த அத்தியாயத்தின் கரு கூறப்படுகிறது. பிறகு சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்ட பொருள் விளக்கம் என்று ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் அத்தியாயத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ள சுருக்கம் என்ற பகுதி, விரிவாகப் படித்ததை எளிதாக மனத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே வேளையில் பொருள் குறிப்பு அகராதியாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வார்த்தை: உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருள் அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காக சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளின் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிரகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும் போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.

ஓம் ஸஹ நாவவது
ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸஹ நௌ-நம் இருவரையும்; அவது-காப்பாராக; ஸஹ நௌ-நம் இருவரையும்; புனக்து-அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ-சேர்ந்து; வீர்யம்-ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை-உழைப்போமாக; அதீதம்-கற்றது; நௌ-நமக்கு; தேஜஸ்வி-பயனுள்ளதாக; அஸ்து-விளங்கட்டும்; மா வித்விஷாவஹை-வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக!
அறிவன் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாரக!
நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்!
எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்றுவிதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைக் தடைகள் வருமாறு.

1. ஆத்யாத்மிகம் : நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
2. ஆதி பவுதிகம் : பிற உயிர்களால் வரும் தடை
3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்றுமுறை சொல்வதன்மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காக பிரார்த்திகிறோம்.

பிறத்தலும் இறத்தலும்




             ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.

கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான். அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்



          யமலோகக் கணக்கன் சித்திரகுப்தன், ஜீவனின் பாப புண்ணியங்களைச், சிரவணர்கள் மூலம் அறிந்து, யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவன் ஆணைப்படி யம கிங்கரர்களைக் கொண்டு அவர்களுக்கான தண்டனைகளை அவ்வப்போது நிறைவேற்றுவான். ஜீவன், வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் யமபுரிக்குச் செல்லும்போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்தி அடைவர். மாசிகம், வருஷாப் திகம் முதலியவற்றால் ஜீவனும், யமகிங்கரர்களும் திருப்தி அடைவர்.

வள்ளலார்



                                கடலூர்   அருகிலுள்ள   திருமருதூர்   கிராமத்தில்   வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை.  தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்று விட்டார்.விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, என்ன நடந்தது ? என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்தடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5)ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.

ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்து கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை ஞானக்குழந்தை என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்ல வில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி.ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறுவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

தன் தம்பி மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி. அண்ணனிடம் தான் ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம்.அவருக்கென தனியே வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார். இதைக் கவனித்த சபாபதி தன் தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது.

வள்ளலார் அம்பிகையை நேரில் கண்ட சித்தர். அண்ணனோடும் அண்ணியோடும் அவர் சென்னையில் வசித்த காலம். திருவொற்றியூர் வடிவுடை அம்மன்மேல் வள்ளலாருக்கு அதீத பக்தி. அம்பிகையின் அருள்பொங்கும் முகம்தான் எத்தனை அழகு. அந்த செய்வீகச் சிலையைப் பார்த்துக்கொண்டே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார். என் தாயை விட்டு இல்லம் போகும் நினைப்பே வரவில்லையே என்று கோவிலிலேயே பெரும்பாலான நேரம் வாசம் செய்வார். பல நாட்கள் இரவு வெகுநேரம் ஆலயத்திலேயே அவர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதுண்டு. ஒருநாள் இரவு அவர் தியானத்தில் அமர்ந்து தன்னை மறந்தார். காலம் கடப்பதை அவர் அறியவில்லை. இரவு வீட்டுக்குப் போய் அண்ணி கையால் சாப்பிட்டுவிட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அம்பிகை அவரது நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டாள். நள்ளிரவு தாண்டிய பிறகுதான் தியானத்திலிருந்து விழித்துக் கொண்டார். அம்பிகையின் நினைவில் தோய்ந்தவாறே இல்லம் சென்றார். வீடு உள்ளே பூட்டியிருந்தது. பாவம், அண்ணி எத்தனை நேரம் காத்திருந்தாரோ! அகாலத்தில் அண்ணியை எழுப்பித் தொந்தரவு செய்யவேண்டாம் என வெளித் திண்ணையிலேயே படுத்துக் கொண்டுவிட்டார் வள்ளலார்.

அப்போது அவர் முன்னே அண்ணி வடிவில் தோன்றினாள் அம்பிகை. அவரைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள். என்ன இவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்? என்று விசாரித்தாள். வந்தது அம்பிகை என வள்ளலார் அப்போது அறியவில்லை. அண்ணி என்றே கருதினார். ஆலயத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தியானம் செய்ததில் நேரம் போனது தெரியவில்லை, அதுதான் தாமதமாகிவிட்டது என்றார். அம்பிகையை ஆலயத்தில் போய் பார்ப்பானேன்? என்னைப் பார்த்தால் போதாதோ? என்றாள் அண்ணி! வள்ளலார் திகைத்தார் என்ன அண்ணி சொல்கிறீர்கள்? என்று குழப்பத்துடன் கேட்டார். எல்லாப் பெண்களுமே அம்பிகையின் வடிவம்தானே என்றேன்! என்றாள் அம்பிகை. பிறகு, சரி, சரி, உட்கார் முதலில் பசிதீரச் சாப்பிடு! என்று அம்பிகை திண்ணையிலேயே வாழையிலையை விரித்தாள். உணவு பரிமாறினாள். வள்ளலாருக்கு அன்று நல்ல பசி. அந்தப் பசிக்கு அந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது! அண்ணி! வழக்கத்தைவிட இன்று சாப்பாடு மிக ருசியாக இருக்கிறதே? இன்று யார் சமைத்தார்கள்? என்று கேட்டார் வள்ளலார். ஆமாம் தேவலோகத்திலிருந்து ஆள் வந்தார்கள் சமைக்க, போயேன். போய் கைகழுவு! பிறகு போய்ப் படுத்துத் தூங்கு என்ற அம்பிகை மெல்ல நடந்து மறைந்தாள். வள்ளலார் உணவின் சுவை பற்றி அதிசயத்தவாறே கை கழுவிவிட்டு உறங்கலானார். சற்று நேரத்தில் வீட்டுக் கதவு உள்ளிருந்து திறந்தது. வள்ளலாரின் உண்மையான அண்ணி வந்து அவரை எழுப்பினாள்.

என்ன இது, கதவைத் தட்டி என்னை எழுப்பக் கூடாதா? சாப்பிடாமலேயே தூங்குகிறாயே? என்று கோபித்துக் கொண்டாள். இப்போதுதானே சாப்பிட்டேன் அண்ணி! நீங்கள்தானே உணவு பரிமாறினீர்கள். சாப்பாடுகூட தேவாமிர்தமாக இருந்தது என்று உங்களிடம் இப்போதுதானே சொன்னேன்; அதற்குள் நீங்களே மறுபடி வீட்டுக்குள்ளிருந்து வருகிறீர்களே? என்று ஆச்சரியத்தோடு வினவினார் வள்ளலார். அதன்பிறகுதான் புரிந்தது-சற்றுமுன் வந்தது அண்ணி அல்ல; அம்பிகை என்பது. வள்ளலாருக்குத் தன்னை தெய்வம் கவனித்துக் கொள்ளும் என்ற மன உறுதி வந்தது அப்போதுதான் வள்ளலார் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அம்பிகையின் அருள் அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடத்த தினத்தன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக தம்பியை அனுப்பினார் சபாபதி.மகிழ்ச்சியுடன் சொன்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு, சபாபதி வியந்து போனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.ராமலிங்கமோ, தன் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும் மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்ப்த்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும் தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர். இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, வள்ளலார் என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார்.அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு ஜீவகாருண்ய உண்மை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையில் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்.

கன்னித் தமிழிலே அரசியல், பொருளாதாரம், சமூகம், மொழி, சமயம், தேசியம், சர்வ தேசியம், பக்தி, முக்தி ஆகிய அனைத்துத் துறைகளைப் பற்றியும், சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய தத்துவங்கள் பற்றியுமாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும், கீர்த்தனைகளும் பாடிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகாகவி. அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்ற வினா எழுந்த காலத்தில், மொழியறிவுக் கல்வி மட்டுமே அன்றி, மெய்ஞானக்கல்வி பெறவும் பெண்களுக்கு உரிமை உண்டு என்று பிரகடனம் செய்த பெரியார். இந்தியாவில் சகோதர அறம் நிலைநாட்டப்பெறல் வேண்டும் எனக் கூறி, முதன்முதலாக பாரத தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்த இந்திய தேசியவாதி. பாரத ஒருமைப்பாட்டின் அடிப்படையில் மனித குலத்தாரின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, சர்வதேச சகோதரத்துவத்தைத் தமிழருக்குப் போதித்த முதல் சர்வ தேசியவாதி.

பாரத தேசிய, சர்வ தேசிய ஒருமைப்பாடுகளின் அடிப்படையில் உயிர்க்குலத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் மந்திர மொழியைத் தந்த முதல்வர். ருஷ்ய நாட்டு பிளவட்ஸ்கியும், கேரளத்து சீர்திருத்தவாதி நாராயணகுருவும், தண்டபாணிசுவாமிகளும், மகாகவி பாரதியும் துதிபாடித் தொழுத துறவோன்! இத்தனை பன்முகச் சிறப்புகள் பெற்றவர் வள்ளலார். கந்தகோட்டம் முருகனின்மீது தெய்வ மணிமாலை பாடியவர். 1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்கு சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.

பரமஹம்ஸ யோகானந்தர்:




சிறு வயதிலேயே முகுந்தனுக்குக் கடவுள் பக்தி அதிகம். கோயிலுக்குச் செல்வதிலும், சந்நியாசிகளை தரிசிப்பதிலும் அவனுக்கு அப்படியொரு ஈடுபாடு! ஒருமுறை, அண்ணனைக் காண ஆக்ராவுக்குச் சென்ற முகுந்தனிடம், நீ இப்படிக் கோயில், குளம், சாமியார் என்று அலைந்தால், அப்பாவின் சொத்தில் ஒரு நயாபைசாகூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும் என அறிவுறுத்தினார் அண்ணன். ஆனால் முகுந்தனோ, எனக்குத் தேவையானதை கடவுள் தருவார் என்றான் உறுதியாக! இதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்த அண்ணன், அப்படியா சேதி..? சரி .. இங்கிருந்து மதுரா செல்வதற்கு, உனக்கும் உன் நண்பன் ஜிதேந்திராவுக்கும் ரயில் டிக்கெட் மட்டுமே எடுத்துத் தருவேன்; செலவுக்குக் காசு தரமாட்டேன். நீங்கள் இருவரும் மதுராவில் வயிராகச் சாப்பிட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தபின், பிருந்தாவனம் முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு ஆக்ராவுக்கு திரும்பவேண்டும். எவரிடமும் பணம் கேட்கவோ, திருடவோ கூடாது. இதில் நீ ஜெயித்துவிட்டால், நானே உனக்குச் சீடனாகிவிடுகிறேன் என்றார். சவாலை ஏற்றுக்கொண்டு, ஜிதேந்திராவுடன் புறப்பட்டான் முகுந்தன். மதுராவுக்கு முந்தைய ரயில்நிலையத்தில், நடுத்தர வயதுடைய இரண்டு பேர் ஏறி, இவர்களுக்கு எதிரில் அமர்ந்தனர். மதுராவில் இறங்கியவர்கள், முகுந்தனையும் ஜிதேந்திராவையும் குதிரை வண்டியில் அழைத்துச் சென்றனர். அந்த வண்டி, ஓர் ஆஸ்ரமத்தை அடைந்தது. அங்கிருந்த பெண்மணியிடம், கௌரிம்மா, இளவரசியால் வரமுடியவில்லையாம். சேதி வந்தது. ஆனால், சமைத்த விருந்து வீணாகிவிடக் கூடாதே என்பதால், இரண்டு கிருஷ்ண பக்தர்களை அழைத்து வந்துள்ளோம் என்றனர். உடனே முகுந்தனையும் ஜிதேந்திராவையும் உள்ளே அழைத்துச் சென்று, முப்பது வகை பண்டங்களைப் பரிமாறினாள் கௌரிம்மா. கிட்டத்தட்ட ராஜ விருந்துதான்!

பிறகு ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பியவர்கள், இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் நின்றனர். அப்போது அவர்களை நோக்கி ஓடி வந்த ஓர் இளைஞன், முகுந்தனை வணங்கினான். என் பெயர் பிரதாப். என் கனவில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், உங்கள் இருவருக்கும் பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். தயவு செய்து மறுக்காதீர்கள்! எனக் கெஞ்சி, அவர்களின் பதிலுக்குக் காத்திரமால், இருவரையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று, கிருஷ்ண தரிசனம் செய்து வைத்து, பிருந்தாவனத்தையும் சுற்றிக் காட்டினான். இருட்டத் துவங்கியதும், ஆக்ரா செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகளையும் அவனே வாங்கித் தந்தான். எல்லாவற்றையும் கண்டு அழுதேவிட்டான் ஜிதேந்திரா, ஆக்ராவுக்கு வந்ததும், அண்ணனிடம் நடந்ததை முகுந்தன் விளக்க... நெக்குருகிப் போன அண்ணன் அனந்தன், தம்பி முகுந்தனுக்குச் சீடரானார். நம்பிக்கை, கடவுளைவிட மேலானது! என உணர்த்திய அந்த முகுந்தனே, அன்பின் அவதாரம் எனப் பின்னாளில் போற்றப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தர். உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில், 1893 ஜனவரி 5-ஆம் தேதி, வங்காள க்ஷத்ரியக் குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு, முகுந்தலால்கோஷ் எனப் பெயரிட்டனர் பெற்றோர். இளம் வயதிலேயே இறை பக்தியுடன் வளர்ந்த முகுந்தன், குருவைத் தேடி கோயில் கோயிலாக, ஆஸ்ரமம் ஆஸ்ரமமாக அலைந்தான். மகா ஞானியும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பூவுலகில் இருந்தபடி அருள்புரிவதாகக் கருதப்படுவருமான மகாவதார் பாபாஜியின் சீடர், ஞானி லஹரி மகாசாயா. இவருடைய அன்புச்சீடரான யுக்தேஷ்வர்கிரியின் அருட் பார்வை, 1910-ஆம் வருடம், முகுந்தனுக்குக் கிடைத்தது. அப்போது முகுந்தனுக்கு 17 வயது. குருவின் பார்வை பட்டதும், தேகம் சிலிர்த்தது முகுந்தனுக்கு. யுக்தேஷ்வர், இறைவனைத் தரிசித்த மகான். நமக்கு நல்வழி காட்டுபவர் இவரே! என உணர்ந்து, அவரைச் சரணடைந்தான். யுக்தேஷ்வரும், வா குழந்தாய்! உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன். உன்னை என்னிடம் அனுப்புவதாக பாபாவே சொல்லியிருக்கிறார் என்று அவனை அன்புடன் வரவேற்று, ஆசீர்வதித்தார்.

1915-ல், தனது 22-வது வயதில் துறவறம் மேற்கொண்ட முகுந்தன், அன்று முதல் யோகானந்த கிரி என அழைக்கப்பட்டார். இந்த உலகுக்கு அவர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டாரோ, அந்தக் கடமையை நிறைவேற்ற ஆங்கிலக் கல்வி அவசியம் என உணர்ந்த குருநாதர், யோகானந்த கிரியை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தார். அவரும் பட்டம் பெற்றார். யோகானந்த கிரியின் பிறப்பின் குறிக்கோள் நிறைவேறும் காலம் நெறுங்கியது. 1920 ஆம் வருடம், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில், இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள, கப்பல் பயணம் மேற்கொண்டார் யோகானந்த கிரி. கிரியா யோகம் என்கிற அற்புதமான யோகக் கலைப் பயிற்சி, பாரத மண்ணில் ரிஷிகள், ஞானிகள் ஆகியோரால் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுசரிக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வருகிறது. உடலின் இயக்கத்தையும் உள்ளத்தின் ஓட்டத்தையும் இணைத்து, பயிற்சியாலும் தியானத்தாலும் மனித உயிர்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் அந்த சூட்சுமக் கலை, மகாவதார் பாபாவிடமிருந்து, அவருடைய சீடர் பரம்பரை மூலம் யோகானந்த கிரிக்குக் கிடைத்தது. பாஸ்டன் மாநாட்டில் இந்து சமயப் பாரம்பரியம், யோகக் கலை, தியான நிலை ஆகியவை குறித்து அவர் ஆற்றிய உரை, அமெரிக்க மக்களை வியக்க வைத்தது. அந்த மண்ணில் தனது பணியைத் துவக்கியவர், அந்த வருடம் தன்னிலை உணர்வோர் சங்கம் எனும் இயக்கத்தையும் துவக்கினார். அமெரிக்கர்களிடையே இந்த யோகக் கலைப் பயிற்சியை அறிமுகப்படுத்தி, போதித்தார்.

இறையுணர்வு என்பது மூட நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது அல்ல. நேரடியான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இறைவன் என்ற பேருண்மையை அனுபவித்து அறிதலே ஞானம். பிரபஞ்சம், இறைவனின் நாடக அரங்கம். அவர் நடத்தும் நாடகத்தில், நமக்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். இறப்பு, மறுபிறப்பு என்பவை, ஒரு பாத்திரத்தில் நடித்து முடித்து, மற்றொரு பாத்திரத்தை ஏற்று நடிப்பது போலத்தான். இங்கே, மனிதர்களது துன்பங்களுக்குக் காரணம், அவர்கள் தாங்கள் ஏற்கும் பாத்திரத்துடன் ஒன்றிவிடுவதே! அதை விடுத்து, நாடகத்தின் சூத்ரதாரியான இறைவனிடம் ஒன்றுவதே, நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு. கிரியா யோகம், தியானம் ஆகியவற்றின் மூலம் இறைவனை அடையலாம் எனும் அவரது போதனைகள், அங்கே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. பிறகு யோகானந்த கிரி, குருநாதரை தரிசிக்கும் ஆவலுடனும், சத்சங்கப் பணியை இந்திய மண்ணில் பரப்பும் எண்ணத்துடனும், 1935- ஆம் வருடம் இந்தியாவுக்கு வந்தார். மகாத்மா காந்தி, சர்.சி.வி ராமன் முதலான சான்றோர்களைச் சந்தித்து, தனது கருத்துக்களை வலியுறுத்தினார். குருநாதர் யுக்தேஷ்வரைச் சந்தித்து நமஸ்கரித்தார். தனது சீடரின் வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைந்த குருநாதர், ஆன்மிகக் கரையைத் தொட்டவர் எனும் பொருள் படும்படி, பரமஹம்ஸர் எனும் பட்டத்தை யோகானந்த கிரிக்கு வழங்கினார். பிறகு, சில நாளில் இறைவனின் திருவடி சேர்ந்தார் குருநாதர்!

பரமஹம்ஸ யோகானந்தர், 1936- ஆம் வருடம் அமெரிக்கா திரும்பி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை எனும் தலைப்பில், ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம், உலகின் பெரும்பாலான மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அதிக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில், இன்றைக்கும் முக்கிய இடத்தில் உள்ளது அந்த நூல்! 1952-ஆம் வருடம், மார்ச் 7- ஆம் தேதி, அமெரிக்காவின் இந்தியத் தூதருக்கும் அவருடைய மனைவிக்கும், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட பரமஹம்ஸ யோகானந்தர், கங்கை நீர், இமயமலைக் குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக் கொண்ட பாரதப் புனித மண்ணை இந்த உடல் ஸ்பரிசித்ததே பெரும்பேறு! என்று சொல்லியபடியே சரிந்து விழுந்தார்; இறைவனுடன் இரண்டறக் கலந்தார்! அந்த நகரில் உள்ள, இறந்தவர் உடல்களைப் பாதுகாக்கும் பிணவறையின் இயக்குநர் எழுதிய கடிதம் ஒன்று, அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழில், 1952- ஆம் வருடம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியானது. அதில், இறந்து 20 நாட்களான பின்பும், பரமஹம்ஸ யோகானந்தரின் உடல், மிக நல்ல நிலையிலேயே இருந்தது. உடலின் எந்தப் பகுதியும் கெடவில்லை; துர்நாற்றமும் வீசவில்லை. உயிரற்ற உடல் ஒன்று, இத்தனை நாட்கள் கடந்தும்கூட, நல்லநிலையில் இருப்பது, இதுவரை நடந்திராத அதிசயம்! என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு, பல நாட்கள் கழித்து, யோகானந்தரின் திருமேனி, கலிபோர்னியா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யோகக் கலையின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மகானான பரமஹம்ஸ யோகானந்தரின் புகழ், உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஓம் என்னும் பிரணவம்?

ஓம்

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

தியானப்பாதையில் வெற்றி பெற...





தியானம் உடல் ஆரோக்கியத்திற்காகவும், மன நலனுக்காகவும் செய்யப்படும் ஒரு மன ஒருமைப்பாட்டு பயிற்சி. தியானம், உடல் நலனுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுக்கை போக்குகிறது. என்பது எல்லாம் தற்போது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாக உலக மக்கள் பழகுகின்ற தியானமாகும். ஆன்மிக வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில், ஆன்ம நலனுக்காக செய்யப்படும் தியானத்திற்கு உபாசனை என்று பெயர். ஆன்மிக ஒளி அல்லது ஆன்மிக ஞானம் பெறுவதுதான் உபாசனையின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய ஆன்மிகத்தியானத்திற்கு உயர்ந்தது மன ஒருமைப்பாடும், மனப்பக்குவமும் இருக்க வேண்டும். இந்த வகை ஆன்மிக தியானப்பாதை மிகவும் நீண்டது. ஒவ்வொரு அடியிலும் ஏராளமான தடைகளும், சந்தேகங்களும் ஏற்படும். பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய இவற்றின் மூலம் தான் இந்த தியானப்பாதையில் நாம் வெற்றி பெற முடியும்.

பிறந்தது புண்ணியமே! வாழ்வது சந்தோஷமே!

முதலில் தியானத்தில் கடவுளைக் கண்டோமா இல்லையா என்பதை விட்டு, மன அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும், சிறந்த முறையில் தியானம் செய்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்வோம். ஆண்டவனை அடைய அனேக வழிகள் உண்டு. அதில் தேர்ந்து, தெளிந்த வழி எது? தியான நேரம் தவிர, மற்ற நேரங்களில் அமைதியாக இருக்க முடியாதது ஏன்? ஆன்மிக இதழில் வரும் தொடர் கட்டுரை ஆன்மிக செயல்முறை, வழிகாட்டவும் உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் தரவும் தான். ஏதோ வழியால் நாம் அனைவருமே ஆன்மிக நாட்டம் கொண்டு தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாவில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பலனளித்தது எவ்வளவு? முதலில் தியானத்தில் கடவுளைக் கண்டோமா இல்லையா என்பதைவிட்டு, மன அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும், சிறந்த முறையில் தியானம் செய்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்வோம்.

தியான நேரத்திலும் கூட சொந்தப் பிரச்சனை, தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சனை என்றே எண்ணங்கள் வெளிப்படுகிறது என்பதை எப்படி வெல்லலாம் என்பதை கற்றுக் கொள்வோம். உடல் சரியாக இருந்தால் பத்மாசனம் சரிதான். இடுப்பு, மூட்டுவலி இருப்பவர்கள் அடம்பிடித்து பத்மாசனம் போட முயல்வது சரியில்லை. தனி அறை இல்லையெனில் அறையின் ஒரு மூலையை தேர்ந்தெடுங்கள். சுத்தமாக வைத்திருங்கள். வெள்ளை துணியை விரிக்கவும். குருவின் படத்தை முன் வைக்கவும். நீங்கள் எவ்விதம் மூச்சு விடுகிறீர்கள் என்பதை கவனிக்கவும். முதுகு, முடிந்தவரை நிமிர்ந்து உட்காரவும். நிதானமாக மூச்சை உள்ளிழுத்து விடவும். முயற்சி, சிரமம் இன்றி சுவாசிக்கவும், தலை, கழுத்து, கை, நெஞ்சு, முதுகு என கால்விரல் வரை நினைத்து சுவாசிக்கவும். எத்தனை என்பது தேவையில்லை. சிரமமற்ற, எளிதான சுவாசமே முக்கியம். தளர்வான உடை அணியவும். இப்போது உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நினைவு கூரவும். சொந்தப் பிரச்னை, குடும்பம், தொழில், வேலை என அனைத்தையும் நினைத்துப் பார்க்கவும். பின் ஒவ்வொன்றாக வெளியேற்றவும். சுவாசிக்கும் போது ஒவ்வொரு பிரச்னையையும் வெளியே தள்ளுவதாக எண்ணி சுவாசிக்கவும். இதை முறைப்படி செய்தால் 5 நிமிடத்தில் நிச்சயமான ரிலாக்ஸேஷன் கிடைப்பதை உணரலாம்.

தியானத்தின் பலன்

கண்ணை மூடிக்கொண்டு ஓம் கேசட்டைப் போட்டுக் கொண்டு தியானம் செய்கிறார்கள் என்றால் அதனால் நிறையவே பலன் இருக்கிறது. ஏனெனில், சிவபெருமான் தவத்தில் இருப்பதாகப் புராணங்களில் படிக்கிறோம். (அந்த தவத்தைக் கலைக்கப் போய், மன்மதன் மாண்ட கதை நமக்குத் தெரியும்). மகாவிஷ்ணு சயனத்தில் இருக்கும் போது கண் மூடியிருக்கிறார். அசுரர்கள் கூட தவம் செய்த பிறகு தான் பலன்களை அடைந்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் மனம் கட்டுப்படுகிறது. மனம் கட்டுப்பாட்டால் ஆசை குறைகிறது. ஆசை குறைந்தால் உலகில் பிரச்சனையே இல்லை. உழைப்பது மூன்று வேளை சாப்பாட்டுக்கும், கடவுளின் கங்கர்யத்திற்கும் மட்டும் போதும் என நினைத்து விட்டால் ஒருவனுக்கு ஏது கஷ்டம்?