Powered By Blogger

18 ஜூன் 2013

சித்த மருத்துவக் குறிப்புகள்


1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசா¢ ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

9. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

10. தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

12. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

13. கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

14. சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

15. கபம் நீங்கி உடல் தேற: கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

16. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

17. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

18. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்

19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

20. காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

நவ பாஷாணம் என்பது என்ன?


நாவினிக்க நாவல் பழம்!



நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது,
இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்க்கும் என்பது லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது,

பலன்கள்:

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மூளை பலமாகும். நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும்.

பித்தத்தைத் தணிக்கும்,மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும்.ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யும்

ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

96 வகை சிவலிங்கங்கள்!



ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!