Powered By Blogger

30 மார்ச் 2013

பூண்டின் மருத்துவக் குணங்கள்

 

 

              மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது.  பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர்.  இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர்.  பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது.  இது சித்தர்கள், ஞானிகளின் காலமாகும்.  இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.  நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர்.  ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம்.  அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.

இப்படி நாம் மறந்த உணவு முறையில் உள்ள  பொருட்களுள் ஒன்றான வெள்ளைப் பூண்டின் மருத்துவக் குணம் பற்றி அறிந்துகொள்வோம்.

இது இந்தியாவில் எல்லா பாகங்களிலும் பயிராகும் ஒருவகை பூண்டாகும்.  நெடிய மணமுடைய, குமிழ் வடிவ கிழங்காகக் காணப்படும்.  ஒரு பூண்டில் 10 முதல் 12 பற்கள் வரை இருக்கும். 

தற்போது சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.  மேலும், இந்திய பூண்டு வகைகள் அதிகம் மருத்துவக் குணம் கொண்டதாக மேற்கத்திய நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
வெள்ளைப் பூண்டில் பசைத்தன்மை அதிகமாக இருப்பதால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். வெள்ளைப் பூண்டானது சைவச் சமையலிலும் சரி, அசைவ சமையலிலும் சரி முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது.

வெள்ளைப் பூண்டின் பயன்பாடு கி.மு.2600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. 

வெள்ளைப் பூண்டை வெள்ளுள்ளி, வெள்வங்காயம், இலசுனம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

பூண்டின் மருத்துவக் குணங்கள்

சன்னியோடு வாதன் தலைநோவு தாள்வலி
மண்ணிவரு நீர்க்கோவை வன்சீதம்-அன்னமே!
உள்ளுள்ளி காண்பாய் உளைமூல ரோகமும்போம்
வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு

-அகத்தியர் குணவாகடம்

பொருள் - சுரக்காய்ச்சல், வளிநோய்கள், ஐயத் தலைவலி, மண்டைக்குத்து, நீரேற்றம், இருமல், இரைப்பு, வயிற்றுவலி போன்றவற்றை நீக்கச் செய்யும்.  முப்பிணி சீதக்கழிச்சல், மூலம், இவைகளுக்கு சிறந்த மருந்தாக வெள்ளைப்பூண்டு பயன்படும்.

பூண்டு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்

பூண்டு பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு இதன் மூலமாக கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது.  வைட்டமின் பி சத்தை அதிகரிக்கச் செய்கிறது.  நரம்பு மண்டலங்க ளுக்கும் இருதய இரத்த ஓட்டத்திற்கும் நல்ல சக்தியைக் கொடுக்கிறது.  மனித இரத்த ஓட்டத்தை தடைகள் இல்லாமல் சீராக செயல்படச் செய்கிறது. இரண்டு ஆண்டி பயாடிக்ø-ஸ உற்பத்தி செய்கிறது.  இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 பாக்டீரியாக்களை அழிக்கிறது.

இரத்த அழுத்தம் குறைய

இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத்தாதுக்கள், வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தில் அதிகளவு இரும்புச் சத்தை உட்கிரகிக்கச் செய்கிறது.  இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் சீராக ஓட ஏதுவாகிறது.

இதயத் தசைகளை வலுவடையச் செய்வதால் மாரடைப்பு போன்ற நோயின் தாக்குதலில் இருந்து விடுபட வைக்கிறது. 

பூண்டை தினமும்  ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  பாலில் வேகவைத்து பூண்டை சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பாதிப்புகளுக்கு உற்ற மருந்தாகும்.

வாய்வுத்தொல்லை நீங்க

பூண்டுக்கு வாயுத் தொல்லையைப் போக்கும் குணமுண்டு.  உணவு முறையில் வாயு பதார்த்தங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.  இவை வயிற்றில் வாயுவை உண்டுபண்ணுவதால் அவை உடலில் எங்காவது நின்று பிடிப்பை ஏற்படுத்திவிடும்.  வாயுத் தொந்தரவு அதிக மன உளைச்சலைக் கொடுக்கும்.  இதன் பாதிப்பை உணராதவர்கள்  இருக்க முடியாது.  இவர்கள் இரண்டு பூண்டுப்பல் எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து நன்கு அரைத்து லேசாக கொதிக்க வைத்து அதனை அருந்தினால் வாயுத் தொந்தரவு நீங்கும்.  அல்லது, 10 பூண்டுப்பல்லை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.  நன்கு பசியைத் தூண்டும்.

· வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

· மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

· மலச்சிக்கலைப் போக்கும்.

· வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும்.

· சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.

· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்பைக் குறைத்து கணையத்தைத் தூண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்யும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

நரம்புப் பாதிப்புகளைப் போக்கும்.  நரம்பு வறட்சி, நரம்புகளில் நீர் கோர்த்தல், நரம்புத் தளர்வு நீங்க பூண்டுப்பல்லை மேற்கண்ட முறையில் சாப்பிட்டு வருவது நல்லது.

வியர்வையை நன்கு வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கிறது.நாவறட்சியைப் போக்குகிறது.

இருமல், ஈளை, இழுப்பு, மூக்கில் நீர் வடிதல், மண்டைக்குத்து, நீரேற்றம் போன்றவற்றிற்கு பூண்டு சிறந்த மருந்தாகும்.

பூண்டானது உணவில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிப்பதால் காய்ச்சல், ஜலதோஷம், போன்ற சிறு சிறு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.

உடல் சூட்டை அகற்றுகிறது. காயங்களை வெகு விரைவில் ஆற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. சிறு கட்டிகளின் மேல் பூண்டை அரைத்து பூசினால் கட்டி விரைவில் குணமாகும்.

தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். 

தற்போதைய ஆராய்ச்சியில் பூண்டானது புற்றுநோயைக் குணப் படுத்தும் தண்மை கொண்டதாக கண்டறிந்துள்ளனர்.

இவ்வளவு சத்துக்களையும் இத்தகைய மருத்துவப் பயன்களையும் கொண்ட வெள்ளைப் பூண்டை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

சுவாச நோய்களுக்கு - கண்டங்கத்திரி




மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை தான் செடிகள், கொடிகள், மரங்கள்.  இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இவற்றில் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். 

கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது.  இதில் மூலிகைகள் பல உள்ளன.  ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது.  இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.

கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது.  மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது.  இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.  சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. 

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ..

    மாறியதோர் மண்டைச்சூலை
    கூறியதோர் தொண்டைப்புண்
    தீராத நாசிபீடம்

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார். 

இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை.  அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்

மாற்றுமுறை

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கண்டங்கத்திரி கஷாயம்

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி  இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும்.  அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும்.  இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும்,  ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு.  அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.  தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.  இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

மலர்களில் மருத்துவம்

மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.  மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.

மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும்  கொடுக்கிறது.  அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.  இதை மலர் மருத்துவம் என்கின்றனர்.  தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி  சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.  அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள்.  இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய்         - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ        - 5 கிராம்

கறிவேப்பிலை        -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

இலுப்பைப் பூ
 
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

ஆவாரம் பூ
 
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூ
 
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ
 
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

மகிழம்பூ
 
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

தாழம்பூ
 
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ
 
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ
 
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ
 
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ
 
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

மல்லிகைப்பூ
 
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பை பூ
 
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ
 
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

கிராம்பு - மருத்துவ குணங்கள்

              
          கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

வெற்றிலை மருத்துவம்

                       மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி: 

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்: 

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.