Powered By Blogger

30 மார்ச் 2013

பூண்டின் மருத்துவக் குணங்கள்

 

 

              மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது.  பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர்.  இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர்.  பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது.  இது சித்தர்கள், ஞானிகளின் காலமாகும்.  இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.  நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர்.  ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம்.  அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.

இப்படி நாம் மறந்த உணவு முறையில் உள்ள  பொருட்களுள் ஒன்றான வெள்ளைப் பூண்டின் மருத்துவக் குணம் பற்றி அறிந்துகொள்வோம்.

இது இந்தியாவில் எல்லா பாகங்களிலும் பயிராகும் ஒருவகை பூண்டாகும்.  நெடிய மணமுடைய, குமிழ் வடிவ கிழங்காகக் காணப்படும்.  ஒரு பூண்டில் 10 முதல் 12 பற்கள் வரை இருக்கும். 

தற்போது சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.  மேலும், இந்திய பூண்டு வகைகள் அதிகம் மருத்துவக் குணம் கொண்டதாக மேற்கத்திய நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
வெள்ளைப் பூண்டில் பசைத்தன்மை அதிகமாக இருப்பதால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். வெள்ளைப் பூண்டானது சைவச் சமையலிலும் சரி, அசைவ சமையலிலும் சரி முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது.

வெள்ளைப் பூண்டின் பயன்பாடு கி.மு.2600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. 

வெள்ளைப் பூண்டை வெள்ளுள்ளி, வெள்வங்காயம், இலசுனம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

பூண்டின் மருத்துவக் குணங்கள்

சன்னியோடு வாதன் தலைநோவு தாள்வலி
மண்ணிவரு நீர்க்கோவை வன்சீதம்-அன்னமே!
உள்ளுள்ளி காண்பாய் உளைமூல ரோகமும்போம்
வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு

-அகத்தியர் குணவாகடம்

பொருள் - சுரக்காய்ச்சல், வளிநோய்கள், ஐயத் தலைவலி, மண்டைக்குத்து, நீரேற்றம், இருமல், இரைப்பு, வயிற்றுவலி போன்றவற்றை நீக்கச் செய்யும்.  முப்பிணி சீதக்கழிச்சல், மூலம், இவைகளுக்கு சிறந்த மருந்தாக வெள்ளைப்பூண்டு பயன்படும்.

பூண்டு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்

பூண்டு பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு இதன் மூலமாக கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது.  வைட்டமின் பி சத்தை அதிகரிக்கச் செய்கிறது.  நரம்பு மண்டலங்க ளுக்கும் இருதய இரத்த ஓட்டத்திற்கும் நல்ல சக்தியைக் கொடுக்கிறது.  மனித இரத்த ஓட்டத்தை தடைகள் இல்லாமல் சீராக செயல்படச் செய்கிறது. இரண்டு ஆண்டி பயாடிக்ø-ஸ உற்பத்தி செய்கிறது.  இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 பாக்டீரியாக்களை அழிக்கிறது.

இரத்த அழுத்தம் குறைய

இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத்தாதுக்கள், வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தில் அதிகளவு இரும்புச் சத்தை உட்கிரகிக்கச் செய்கிறது.  இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் சீராக ஓட ஏதுவாகிறது.

இதயத் தசைகளை வலுவடையச் செய்வதால் மாரடைப்பு போன்ற நோயின் தாக்குதலில் இருந்து விடுபட வைக்கிறது. 

பூண்டை தினமும்  ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  பாலில் வேகவைத்து பூண்டை சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பாதிப்புகளுக்கு உற்ற மருந்தாகும்.

வாய்வுத்தொல்லை நீங்க

பூண்டுக்கு வாயுத் தொல்லையைப் போக்கும் குணமுண்டு.  உணவு முறையில் வாயு பதார்த்தங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.  இவை வயிற்றில் வாயுவை உண்டுபண்ணுவதால் அவை உடலில் எங்காவது நின்று பிடிப்பை ஏற்படுத்திவிடும்.  வாயுத் தொந்தரவு அதிக மன உளைச்சலைக் கொடுக்கும்.  இதன் பாதிப்பை உணராதவர்கள்  இருக்க முடியாது.  இவர்கள் இரண்டு பூண்டுப்பல் எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து நன்கு அரைத்து லேசாக கொதிக்க வைத்து அதனை அருந்தினால் வாயுத் தொந்தரவு நீங்கும்.  அல்லது, 10 பூண்டுப்பல்லை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.  நன்கு பசியைத் தூண்டும்.

· வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

· மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

· மலச்சிக்கலைப் போக்கும்.

· வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும்.

· சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.

· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்பைக் குறைத்து கணையத்தைத் தூண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்யும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

நரம்புப் பாதிப்புகளைப் போக்கும்.  நரம்பு வறட்சி, நரம்புகளில் நீர் கோர்த்தல், நரம்புத் தளர்வு நீங்க பூண்டுப்பல்லை மேற்கண்ட முறையில் சாப்பிட்டு வருவது நல்லது.

வியர்வையை நன்கு வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கிறது.நாவறட்சியைப் போக்குகிறது.

இருமல், ஈளை, இழுப்பு, மூக்கில் நீர் வடிதல், மண்டைக்குத்து, நீரேற்றம் போன்றவற்றிற்கு பூண்டு சிறந்த மருந்தாகும்.

பூண்டானது உணவில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிப்பதால் காய்ச்சல், ஜலதோஷம், போன்ற சிறு சிறு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.

உடல் சூட்டை அகற்றுகிறது. காயங்களை வெகு விரைவில் ஆற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. சிறு கட்டிகளின் மேல் பூண்டை அரைத்து பூசினால் கட்டி விரைவில் குணமாகும்.

தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். 

தற்போதைய ஆராய்ச்சியில் பூண்டானது புற்றுநோயைக் குணப் படுத்தும் தண்மை கொண்டதாக கண்டறிந்துள்ளனர்.

இவ்வளவு சத்துக்களையும் இத்தகைய மருத்துவப் பயன்களையும் கொண்ட வெள்ளைப் பூண்டை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்