Powered By Blogger

21 ஜனவரி 2009

குழந்தைகளுக்கான நிலா பாட்டு - 11

வித்திலா மலேவிளைந்த வெண்ணிலாவே – நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்வாய் வெண்ணிலாவே
அந்தரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே-அவர்
ஆடும்வகை யெப்படியோ வெண்ணிலாவே ?
ஞானமய மாய்விளக்கும் வெண்ணிலாவே –என்னை
நானறியச் சொல்லுகண்டாய வெண்ணிலாவே –
அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலாவே –எங்கள்
ஐயர்வரு வாரோசொல்வாய் வெண்ணிலாவே –
ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே –அருளாளர்
வரு வாரோசொல்லாய்,வெண்ணிலாவே.

1.
நிலாநிலா வாவா
நில்லாமே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா.
நடுவீட்டில் வையே
நல்ல துதி செய்யே
வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு
அள்ளியெடுத்து அப்பன் வாயில்
கொஞ்சிக் கொஞ்சி யூட்டு
குழந்தைக்குச் சிரிப்புக் காட்டு

2.
எட்டிஎட்டிப் பார்க்கும்
வட்ட வட்ட நிலாவே
துள்ளித்துள்ளிச் சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே.

3.
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.

4.
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட.