ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1
போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2
முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3
சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே. 4
கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து
கிருபையுள்ள வுருவேற்றித் திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாகப் புதைத்துவிடு நடுச் சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரண மாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
கதைதெரியச் சொல்லுகிறேனின்னம் பாரே. 5
இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
அறிவுடைய முளைச்சீவிச் சிங்கை யோதி
வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
சதிராக ஆணிகொண் டடித்தி டாயே. 6
அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு
ஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்
தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்
தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்கு
விடுத்தபின்பு விடமேறிக் கருவிப் போகும்
விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
தடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாரு
தட்டழிந்து உயிர்புதலாய்ச் சேத மாமே. 7
ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
விளையாட்டே யில்லையடா இந்தப் போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
தவறாது ராமனுடை வாக்யந் தானே. 8
தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
கோனென்ற கோடு சித்துக் கணத்திலாடுங்
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே. 9
யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்
ஓகோகோ முன்னுரைத்த மூலத் தாலே
யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
தாகிகளாயத் தாயுடைய கிருபை யாலே
தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
மோகிகளால் மூலபூசா விதிபத் தாலே
முத்திபெறச் சித்திவிளை பத்து முற்றே. 10