Powered By Blogger

06 ஜனவரி 2015

வீரபத்திரர்!!!

வீரபத்திரர்!!!

சிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர். தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். அளவற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அகந்தை கொள்ளலாகாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு ஒரு பகையும் வேண்டாம். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம். அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி, தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். அதில், வீரபத்திரரை அனுப்பிப் பெற்ற வெற்றி தனி வீர வரலாறாகவும் உன்னதமான வெற்றியாகவும் கருதப்படுகிறது. ஏழு வீரட்டங்களில், தேவர்களுக்கு உதவிடவே எம்பெருமான் போர் புரிந்துள்ள நிலையில், தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களையே எதிர்த்துப் போரிட்டு அவர்களை நிலைகுலையச் செய்து, கடுமையாகத் தண்டித்தான். தேவர்கள் ஒவ்வொருவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட விதம், தனித்தனி வீர பராக்கிரமமாகவும் போற்றப்படுகிறது. கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருமந்திரம், திருவாசகம், திருவிசைப்பா ஆகியவற்றோடு சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களிலும் வீரபத்திரரின் சாகசங்கள் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

புராணங்களில் வீரபத்திரர்: 
 கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட அரிய நூல் கந்தபுராணம் ஆகும். ஆறு காண்டங்களை உடையது. ஆறாவது காண்டமே தக்க காண்டம். இதில் வேள்விப்படலம், உமைவருபடலம், வீரபத்திரர் படலம், யாக சங்காரப் படலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வீரபத்திரர் படலத்தின் அறுபது பாடல்களும், யாக சங்காரப் படலத்தின் நூற்று எழுபத்தாறு பாடல்களும் வீரபத்திரர் புகழ்பாடும் செய்திகளைக் கொண்டவை ஆகும்.

உலகம் உய்வதற்காக, உமையம்மை திருக்கயிலையிலிருந்து காஞ்சிக்கு வந்து 64 அறங்களை வளர்த்து, கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கத் திருமேனியை அமைத்து, பூசனை செய்த வண்ணம், தவமிருந்த பெருமை காஞ்சித் தலத்திற்கே உரியதாகும். அதன் காரணமாகவே, தேவருலகம் முழுவதுமே திரண்டெழுந்து, ஏகம்பரை வழிபாட்டுப் பெரும்பேறு பெற்றனர். சிவஞான முனிவரால் இயற்றப்பெற்ற காஞ்சிப்புராணம், இலக்கிய நயம் மிகுந்து விளங்குவதாகும். தல புராணங்களில் தலையாய நூல் ஆகும். 68 படலங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் தக்கேசப் படலம் எழுபத்தேழு பாடல்களைக் கொண்டதாகும். அதனுடன் முப்பத்தொன்று பாடல்களைக் கொண்ட விடுவச் சேனப்படலமும், வீரபத்திரரைப் பற்றிக் கூறுபவை ஆகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்விகளில் சிறந்ததை, சிவபெருமானையே தலைவராகக் கொண்டு செய்யவேண்டும். பிறரைக் கொண்டு செய்வோர் அழிவார்கள். சிவபரம்பொருளை இகழ்வோரும், அதற்கு உடன்பட்டோரும் வருந்தவேண்டிவரும். சிவ அபராதம் எனும் குற்றம், சிவ பூஜையால் மட்டுமே நீங்கும். வேள்விச் சாலையில் தேவர்களோடு நிகழ்ந்த போரில், திருமாலும் கருடாரூடராக வீரபத்திரரை எதிர்த்த நிலையில், திருமால் ஏவிய சக்கரத்தை வீரபத்திரர் மார்பில் அணிந்திருந்த கபாலம் ஒன்று கவ்விக்கொண்டதும், விசுவச்சேனப் படலத்தில், அதனைத் திருமால் மீண்டும் பெற்றார் என்பதும் விளக்கப்படுகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில் வீரபத்திரரை வீரன், வில்லி, செஞ்சடையான், பத்திரனார் என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார். மணிவாசகரின் திருவாசகத்தில் திருஉந்தியார் பகுதி, வீரபத்திரரின் சாகசங்களை, மகளிர் உந்திக் குதித்து விளையாடும்போது பாடும் 20 பாடல்களாகத் தொகுத்துள்ளார்.

சாடிய வேள்வி சரிந்திடத்
தேவர்கள் ஓடியவா பாடி - உந்தீ பற!


என்று தக்கனின் யாகசாலையே சரிந்ததாக, தேவர்கள் ஓடி ஒளிந்ததைக் கூறுகிறார். இந்திரன் குயிலாக மாறி ஓடி ஒளிந்தான். அக்னி தேவனோ கரங்களை இழந்து கிளியாக மாறி மறைந்தான். அவிர்ப்பாகம் உண்ணத் துடித்த பகன் கண்களை இழந்தான். பகலவனின் பற்கள் நெறித்ததும், குதித்துக் குதித்து மகளிர் பாடும் எக்காளப் பாடல்களாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கவை ஆகும்.

தட்சனை வதம் செய்த வீரபத்திரர்: 
பிரம்மதேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை எப்பெருமானுக்கே தாரைவார்த்துத் தந்தபோதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். சிவபெருமானை அவமதிப்பதற்காகவே, முப்பதினாயிரம் மகரிஷிகளைக் கொண்டு பெரியதொரு வேள்வியைத் துவக்கினான். தன் மகளை மணந்த மகேசுவரனுக்கு மட்டும் அழைப்பினை அனுப்பாமல், பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி மகேசனை அவமானப்படுத்திட எண்ணினான். பதியின் சொல்லை மீறி, தந்தை தட்சன் நடத்தும் வேள்விக்கு வந்த தாட்சாயனி, தட்சனின் கொடுஞ்சொற்களால் மகேசனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் தாங்காமல், அந்த வேள்விக் குண்டத்திலேயே பாய்ந்து மறைந்தாள். தேவியின் மறைவு கேட்டுச் சினங்கொண்ட முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரே வீரபத்திரர்.

சிவபெருமானின் அம்சமாகவே, அக்னிச்சடையுடனும், மூன்று கண்களுடனும், எட்டுக் கரங்களிலும் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி, தேள்களினாலான மாலையணிந்து, நாகத்தை உபவீதமாகக் கொண்டு, கால்களில் பாதுகையணிந்தபடி, கண்களில் வீசும் பொறி வெங்கனலாகக் கிளம்பியபடி தோன்றினார் வீரபத்திரர். சிவபெருமானை மதிக்காமல், சிவநிந்தனையையே குறிக்கோளாக அந்த யாகத்திற்கு வந்தோர் அனைவருமே தண்டிக்கப்பட்டனர். தட்சன் தலையை முதலில் வீரபத்திரர் வெட்டி வீழ்த்தினார். மான் வடிவம் கொண்டு ஓடிய யாகபுருஷனை வதம் செய்தார். சூரியனின் கண்களைப் பிடுங்கி, பற்களை உதிர்த்தார். அக்னிதேவனின் கரம் கெடுத்தார். சரஸ்வதியின் மூக்கை அறுத்தார். இந்திரனின் தோள் நெரித்தார். பிரம்மதேவன் தலை இழந்தான். வேள்விச்சாலை முழுவதும் அழிந்திட, தேவர்கள் திசையெட்டிலும் ஓடிட, திருமால் வீரபத்திரரை எதிர்த்தார்.

திருமாலின் சக்கரத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு முகம் கவ்விக்கொண்டது. தீயோன் தக்கனோடு இணைந்தோர் அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனுக்கு அடிபணிந்து பிழைபொறுக்குமாறு வேண்டிட, இடபாரூடராய் பெருமான் காட்சியளித்தார். வேள்விக் களத்தில் இறந்த அனைவருமே உயிர்பெற்றனர். தட்சனுக்கு ஆட்டுத்தலையே பொருத்தப்பட்டது. ஈசனின் பாதம் பணிந்து மன்னித்தருளக் கோரினான் தட்சன். தான் செய்த பிழை பொறுத்து, அவிர்ப்பாகத்தை ஏற்பதோடு வேள்விச்சாலை அமைந்த இடத்திலேயே எழுந்தருளி, பூவுலகோர்க்கு அருள்புரிய வேண்டுமென மண்டியிட்டான் தட்சன். அந்தத் தலம்தான் பாரிஜாத வனமாகவிருந்த பறியலூர். இன்று திருப்பரசலூர் என்று அழைக்கப்படுகிறது.

வீரபத்திரர் திருமேனி: 
வீரபத்திரர் திருமேனி எவ்வாறு அமையவேண்டும் என்று ஆகமங்கள், தத்துவநிதி ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளன. எட்டுக் கரங்கள் முதல் முப்பத்திரண்டு கரங்கள் கொண்டவராகவும் வீரபத்திரர் திருமேனியை அமைக்கலாம் என்று உத்தர காரணாகமம் கூறுகிறது. தீச்சுவாலையை மகுடமாகக் கொண்டு, முக்கண்ணனாக, பயம் தரும் கபாலமாலையும் ஒலியெழுப்பும் மணிமாலையும் அணிந்தவர். இறுக்கிய கஞ்சுகம் அணிந்தவர். வாள், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், பிண்டிபாலம் ஆகியவற்றை ஏந்தியவர். நாகத்தை யக்ஞோபவீதமாக (பூணூலாக) கொண்டு, கேள்களினால் ஆன மாலையை அணிபவராகவும், பாதுகைகளை அணிந்தவராகவும் வீரபத்திரர் சித்திரிக்கப்படுகிறார். ஆட்டுத்தலையுடன் இரு கரங்கூப்பிய நிலையில், தட்சன் வலதுபுறம் நிற்க, வீரபத்திரரோடு துணையாக வந்த பத்ரகாளியும் இடதுபுறம் நிற்கும் வண்ணம், திருமேனி அமைக்கப்பட வேண்டும்.

வெற்றி தரும் வீரபத்திரர்: 
தத்தம் செயல்களில் வெற்றிபெற வேண்டுவோர், வீரபத்திரரை வழிபடல் வேண்டும். கர்நாடக மாநிலத்து லிங்காயத் இனத்தவர், வீரசைவர்கள் எனப்படுவர். வீரபத்திரருக்குத் தனிக்கோயில் அமைத்துச் சிறப்பாக வழிபடுகிறார்கள். தும்பைப்பூ மாலை வீரபத்திரருக்கு மிகவும் பிரியமானதாகும். எவரையும் அஞ்சாது, அதிரடிப்போர் புரிவதன் அடையாளம் அது. கரை இல்லாத வெள்ளை ஆடையே வீரபத்திரருக்கு அணிவிக்க வேண்டும். ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாள், மகா அஷ்டமி எனப்படுகிறது. தட்சனின் யாகத்தை அழித்த வீரபத்திரரைக் குறித்து நோற்கப்படும் விரதம் அது. புண்ணிய நதிகளின் காவலராக வீரபத்திரர் உள்ளார். கும்பகோணம் மகாமகக் குளத்தருகே அவரது சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமர்ந்த கோலத்தில், யோக நிஷ்டையில், சப்தமாதர்கள் திருமேனிகளுக்கு அருகில், வீரபத்திரரை தரிசிக்கலாம். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் வெற்றிலை மாலை அணிவிப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கில் வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து, மாலையாக அணிவிப்பது, ஆடிப்பூர நாட்களில் நடைபெறும். அனுமந்தபுரந்தில் அப்படி அணிவிப்பது 12,800 வெற்றிலைகள் கொண்ட மாலை ஆகும்.

அகோர வீரபத்திரரும் அக்னி வீரபத்திரரும்: 
கர்நாடகத்தை விஜயநகரப் பேரரசர்கள் ஆண்டபோது, அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழகத்தின் பல பகுதிகளில் நாயக்கர் ஆட்சி மேலோங்கியது. அந்தக் காலத்தில் உருவான பல திருக்கோயில்களின் மண்டபங்களில், பெரிய சிற்பங்களாகவும் தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும் வீரபத்திரர் திருவுருவங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், கம்பத்தடி மண்டபத்தினருகில், மேற்கு நோக்கியபடி உள்ள அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலை வடிவங்கள், வீரபத்திரர் சிலைகளிலே மிகப் பெரியவை ஆகும். எட்டு, பத்துக் கரங்களுடன், கனல் கக்கும் கண்களுடன் அக்னி சுவாலையாக சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் காட்சி தரும் வீரபத்திரர் திருமேனிகள், காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாகும். இவைபோன்ற சிற்பங்கள் பேரூர், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, தாரமங்கலம், அவிநாசி போன்ற தலங்களிலும் இடம் பெற்றுள்ளன. பேரூரிலுள்ள அக்னி வீரபத்திரர் ஜடாமகுடத்தில் தேள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நடன வீரபத்திரர்: 
தட்சனின் யாகத்தைத் துவம்சம் செய்து தேவர்களையெல்லம் புறமுதுகிட்டு ஓடச் செய்த மகிழ்ச்சியில், ஆனந்த நடனமிடும் கோலத்திலும் வீரபத்திரரை நாம் பல ஆலயங்களில் காணலாம். கிருஷ்ணாபுரம், மதுரை ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் நடன வீரபத்திரர் சிலை கலை நயம் மிக்கதாகக் காணப்படுகின்றன. இடது கரத்தில் வீரபத்திரரின் உருவம் பதித்த கேடயத்துடன், வலது காலைத் தூக்கி உயர்த்திய கோலத்தில் நடன வீரபத்திரரைக் காணலாம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் போன்ற பல ஆலயங்களின் மண்டபத்தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும், நான்கு கரங்கள் கொண்ட வீரபத்திரரைக் காணமுடிகிறது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் தெற்கு ராஜகோபுரத்தின் முதல் நிலையையொட்டி 18 கரங்களைக் கொண்ட வீரபத்திர சுதைச் சிற்பங்கள், வண்ணப்பூச்சுடன் கம்பீரமாகத் திகழ்கின்றன.

பிரளயகால வீரபத்திரர்: 
தட்சனின் யாகத்தை அழித்துத் துவம்சம் செய்ய 32 கரங்களுடன் வெகுண்டெழுந்த பிரளய கால ருத்திரரின் அற்புதத் திருமேனி ஒன்று, பெங்களூருக்கு அருகில் குட்டஹள்ளி என்ற சிற்றூரில் காணலாம். தை மாதம் ரதசப்தமி நாளன்று, அக்னி குண்டம் வளர்த்து, பக்தர்கள் பூக்குழி இறங்குதல் தனிச்சிறப்பு ஆகும்.

திருப்பறியலூர்: 
தட்சனின் யாகத்திற்கு வந்தவர் அனைவரின் தீமைகளையும் பறித்துக்கொண்டதால் பறியலூர் என்றழைக்கப்படலாயிற்று. மாமனின் தலையைப் பறித்ததாய் மாமன் பறியல் என்றும், தட்சன் வேள்வி செய்த தலமாதலால் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில், எம்பெருமான், தானே வராமல், தனது சடையிலிருந்து தோன்றிய வீரபத்திரரை அனுப்பி, தட்சனுக்குப் பாடம் புகட்டிய தலம் இது. மயிலாடுதுறை - பொறையார் சாலையில் செம்பொனார்கோவில் என்ற திருத்தலத்திற்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. காவிரி தென்கரையில் உள்ள திருத்தலம். தீமைகளை அகற்றும் பரிகாரத்தலம் ஆனதால், மேற்குத் திசை நோக்கியபடி வீரட்டேசுவரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. உத்தரவேதி தீர்த்தம், தேவதீர்த்தம், திக்பாலகர் தீர்த்தம், கமல தீர்த்தம் என நான்கு புண்ணிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன.

அவற்றுள் உத்தரவேதி தீர்த்தம் மிக உத்தமமானது. ஆயுள் நீடித்து, பிணிகள் பறந்திட, நிலைத்த முக்தியை அருளும் தீர்த்தம் இது. இரண்டு பிராகாரங்களைக் கொண்ட சிறிய கோயில். கருவறையில், சுயம்புலிங்கத் திருமேனியாக வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். தட்சன் வேள்வியைச் சாடியதால் தட்சபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய சன்னதியில் நான்கு கரங்களோடு இளங் கொம்பனையாள் என்ற திருநாமத்துடன் அன்னை எழுந்தருளியுள்ளாள். அம்மன் சன்னதியையடுத்து தனிச் சன்னதியாக அமைந்தது வீரபத்திர சன்னதி.

எட்டுக் கரங்களோடு, மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகியவற்றைத் தாங்கியபடி, அக்னிசுவாலைகள் கிரீடமாக அழகுசெய்ய அகோர வீரபத்திரர், கனிந்த அருட்பார்வையோடு காட்சி தருகிறார். காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கிறான். பீடத்தின் முகப்புத் தகட்டில், பிரம்மா ஆசாரியனாக அமர்ந்து வேள்வி செய்யும் கோலத்தையும் தட்சனையும் காணலாம். ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆலயத்திற்குத் தெற்கே உள்ள உத்தரவேதி தீர்த்தமே, தட்சன் செய்த வேள்விக் குண்டம் என்றும் கூறுவர்.

பெரும்பேர் கண்டிகை: 
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் இது. ஊருக்குள்ளே மையமாக, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வீரபத்திரர் திருக்கோயில். வடமேற்கு முனையில் பத்திரகாளி சன்னதியும் உள்ளது.

திருமயிலை: 
சென்னை மாநகரில் அநேக இடங்களில் வீரபத்திரருக்கெனத் தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. திருமயிலை மாதவப்பெருமாள் கோயில் அருகிலும், வில்லிவாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களிலும் உள்ள ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. ராயபுரம் அங்காளம்மன் திருக்கோயிலில் எட்டுக் கரங்களும் கொண்ட ஆறடி உயர வீரபத்திரர் சிலை உள்ளது. வெண்ணெய்க் காப்பும் வெற்றிலைப் படலும், இங்கே சிறப்பு வழிபாடுகள் ஆகும்.

சு. ஆடுதுறை: 
பெரம்பலூர் மாவட்டம், திட்டக்குடியையொட்டி, வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம். இங்குள்ள குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயிலில், சுதை வடிவிலான, 18 கரங்கள் கொண்ட அழகிய வீரபத்திரர் திருமேனி உள்ளது.

வீரபத்திரர் ஆலயங்கள்: 
வீரபத்திரருக்கு, வடக்குத் திசை நோக்கியபடி தனிக்கோயில் அமைவதோடு, சிவாலயங்களில் உள்சுற்றில் தென்திசையில், சப்தமாதர்களுக்கு அருகில் வீரபத்திரரைக் காணலாம். அதுதவிர தென்தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் எழுப்பப்பட்டுள்ள மகா மண்டபங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் மற்றும் நாட்டியமாடும் நிலையில் வீரபத்திரர் சிலைகளைக் காணலாம். வீரபத்திரரை மூலவராகக் கொண்ட தனி ஆலயங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன.
அனுமந்தபுரம்:
அரன்மைந்தன்புரம் என்ற அழகுப் பெயரை, தற்போது அனுமந்தபுரம் என்று ஆக்கிய தலம், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள்கோவிலுக்குச் தென்கிழக்கே 7கி.மீ. தொலைவில் உள்ளது. எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருவுருவமாக வீரபத்திரர் விளங்குகிறார். தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது. வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரங் கூப்பியபடி நிற்பதைக் காணலாம். மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியபடி, கீழ்க்கரங்களில் கத்தியும் கேடயமும் தாங்கிய கோலம். வெண்ணெய் சாற்றுவதும், வீரபத்திரருக்கு வெற்றிலைப் படல் அமைத்து வெற்றிலை மாலை அணிவிப்பதும் தனிச்சிறப்பாகும்.

வீராவாடி - 
திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. (கூத்தனூர் சரஸ்வதி கோயில், அம்பர் மாகாளம் ஆகிய தலங்கள் அருகில் உள்ளன) 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய கோயில். அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது. மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.

சப்தமாதர் அருகில் வீரபத்திரர்: 
இவை தவிர, கோவையையடுத்த பேரூர், நாகப்பட்டினம், சேலம், வில்லிவாக்கம், வேளச்சேரி, திருவானைக்கா, தாராசுரம், சுவாமிமலை, பவானிசாகர் ஆகிய ஊர்களிலும் வீரபத்திரருக்குத் தனி ஆலயங்கள் உள்ளன. சாமுண்டி, பிராமி, மாகேசுவரி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி மற்றும் வாராகி ஆகிய சப்தமாதர் திருமேனிகள், திருக்கோயில்களின் தெற்கு உள்சுற்றில் இடம் பெறுபவை ஆகும். இப்படி அமைந்த கோயில்கள், பெரும்பாலும் பல்லவர் காலத்தவை ஆகும். அந்த ஏழு மாதர்களுக்கு அருகில் அவர்களின் காவலராக, அமர்ந்த கோலத்தில் வீரபத்திரரைக் காணலாம்.

தக்கயாகப் பரணி: 
ஒட்டக்கூத்தர், சோழப் பேரரசின் ஒளிமயமான ஆட்சிக் காலத்தில் மூன்று பேரரசர்களுக்கு ஆசானாகவும் அரசவைக் கவிஞனாகவும் திகழ்ந்தவர். ஒரு சமயம், தாராசுரம் வீதிகளில் கூத்தர் நடந்து சென்றுகொண்டிருந்தார். எதிரே, குடந்தை மடத்தின் பெரிய துறவியொருவர் தேவாரத்தைப் பாடிக்கொண்டு வருவதைக் கண்டார். அவரைப் பார்த்து கூத்தர், அடிகளே, இந்த தேவாரத்திற்கு உமக்குப் பொருள் தெரியுமா? என்று கேட்டார். கூத்தரின் கேள்வியில் எழுந்த தோரணை துறவியை சினமடையச் செய்தது. எரிச்சல் கொண்ட துறவி, கூத்தரே, இதன் பொருளை, உம்மால் ஆயிரம் வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது என்று பதிலளித்தார். கோபம் கொண்டார் கூத்தபிரான். தனது சவுக்கால் பலமாக துறவியை அடிக்க, அடி தாங்காது துறவி மரணமுற்றார். மடத்துத் துறவிகள் பொங்கியெழுந்து, அரசரிடம் முறையிட்டனர். கொலைக்குரிய குற்றம் செய்துள்ள அரசவைப் புலவரை எம்மிடம் ஒப்படைப்பீர் என்று வேண்டினார்.

நகரெங்கும் ஒட்டக்கூத்தரைத் தேடிப் புறப்பட்டனர். ஆனால் கூத்தரோ தாராசுரம் வீரபத்திரர் கோயிலினுள்ளே சென்று ஒளிந்துகொண்டார். ஆலயத்திலிருந்து காளி சன்னதி முன்னே உருகித் துகித்து, தன்னை இக்கட்டிலிருந்து காத்திடக் கோரி அழுதார். துறவிகளோ ஆலயத்தைச் சூழ்ந்து நின்றவண்ணம் இருந்தனர். காளிதேவி ஒட்டக்கூத்தரிடம், வீரசைவர்களின் வழிபாட்டு தெய்வமான வீரபத்திரர் மீது பரணி பாடுவாயாக. அதுவே உன்னை விடுவிக்கும்! என்று திருவாய் மலர்ந்தருளினாள். அது மட்டுமல்ல, எழுத்தாணியும் ஏடும் தந்ததோடு அவர் பாடலை எழுதுவதற்கு உதவிட , கைவிளக்கையும் ஏந்தி நின்றாள். ஒரு நிலையில் விளக்கில் எண்ணெய் குறைந்தபோது, அதற்கு எண்ணெய் விட காளிதேவி குனிந்தாள். அப்போது அவளது கரத்திலிருந்து விளக்கு சற்று அசைந்ததாம். முனைப்புடன் நூலை எழுதும்போது இடர் உண்டானதால், யார் விளக்கை ஏந்தி நிற்கிறார்கள் என்பதை அறிந்திராத கூத்தர், காளியின் கன்னத்திலேயே அறைந்தாராம்.

ஆனால் காளியோ புலவரின் அச்செயலையும் பூசையாக ஏற்றுக்கொண்டாள். நூலை எழுதி முடித்த கூத்தர் இருகரங் கூப்பி காளியைத் தொழுதபோது, அன்னையின் கன்னத்தில் தனது கை பதிந்திருக்கக்கண்டு வருந்தித் தன்னை மன்னித்தருளும்படி கோரினார். காளிதேவி மகிழ்வுற்று, உனது நூலை வாசலில் நிற்கும் துறவிகளிடம் கொடு! என்று ஆணையிட்டாள். துறவிகளும் அவரது நூலைப் படித்து, வீரபத்திரரின் சாகசங்கள் பற்றி அரிய நூலை எழுதிய கூத்தரை மன்னித்ததோடு, பல்வேறு சிறப்புகளையும் செய்தனர். தக்கயாகப் பரணியை ஒட்டக்கூத்தர் இயற்றிய இடம் தாராசுரம், ஐராவதேசுவரர் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் உள்ளது என்பர். அதனை அரங்கேற்றிய இடம், கும்பகோணம் மகாமகக் குளத்தருகில் உள்ள பெரிய மடத்தின் முன்னே உள்ள திடல் ஆகும். இங்கு அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயத்தில் ஒட்டக்கூத்தரின் சிலையும் அமைந்துள்ளது. ஆணவம் அழிந்து ஞானம் பிறந்த கதையே வீரபத்திரரின் அருட்கோலம். திக்கெட்டும் வெற்றிகள் குவித்திட வீரபத்திரரைப் பணிவோம்.