Powered By Blogger

28 ஜனவரி 2013

பிறத்தலும் இறத்தலும்




             ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.

கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான். அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.