Powered By Blogger

28 ஜனவரி 2013

வள்ளலார்



                                கடலூர்   அருகிலுள்ள   திருமருதூர்   கிராமத்தில்   வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை.  தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்று விட்டார்.விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, என்ன நடந்தது ? என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்தடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5)ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.

ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்து கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை ஞானக்குழந்தை என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்ல வில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி.ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறுவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

தன் தம்பி மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி. அண்ணனிடம் தான் ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம்.அவருக்கென தனியே வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார். இதைக் கவனித்த சபாபதி தன் தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது.

வள்ளலார் அம்பிகையை நேரில் கண்ட சித்தர். அண்ணனோடும் அண்ணியோடும் அவர் சென்னையில் வசித்த காலம். திருவொற்றியூர் வடிவுடை அம்மன்மேல் வள்ளலாருக்கு அதீத பக்தி. அம்பிகையின் அருள்பொங்கும் முகம்தான் எத்தனை அழகு. அந்த செய்வீகச் சிலையைப் பார்த்துக்கொண்டே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார். என் தாயை விட்டு இல்லம் போகும் நினைப்பே வரவில்லையே என்று கோவிலிலேயே பெரும்பாலான நேரம் வாசம் செய்வார். பல நாட்கள் இரவு வெகுநேரம் ஆலயத்திலேயே அவர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதுண்டு. ஒருநாள் இரவு அவர் தியானத்தில் அமர்ந்து தன்னை மறந்தார். காலம் கடப்பதை அவர் அறியவில்லை. இரவு வீட்டுக்குப் போய் அண்ணி கையால் சாப்பிட்டுவிட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அம்பிகை அவரது நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டாள். நள்ளிரவு தாண்டிய பிறகுதான் தியானத்திலிருந்து விழித்துக் கொண்டார். அம்பிகையின் நினைவில் தோய்ந்தவாறே இல்லம் சென்றார். வீடு உள்ளே பூட்டியிருந்தது. பாவம், அண்ணி எத்தனை நேரம் காத்திருந்தாரோ! அகாலத்தில் அண்ணியை எழுப்பித் தொந்தரவு செய்யவேண்டாம் என வெளித் திண்ணையிலேயே படுத்துக் கொண்டுவிட்டார் வள்ளலார்.

அப்போது அவர் முன்னே அண்ணி வடிவில் தோன்றினாள் அம்பிகை. அவரைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள். என்ன இவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்? என்று விசாரித்தாள். வந்தது அம்பிகை என வள்ளலார் அப்போது அறியவில்லை. அண்ணி என்றே கருதினார். ஆலயத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தியானம் செய்ததில் நேரம் போனது தெரியவில்லை, அதுதான் தாமதமாகிவிட்டது என்றார். அம்பிகையை ஆலயத்தில் போய் பார்ப்பானேன்? என்னைப் பார்த்தால் போதாதோ? என்றாள் அண்ணி! வள்ளலார் திகைத்தார் என்ன அண்ணி சொல்கிறீர்கள்? என்று குழப்பத்துடன் கேட்டார். எல்லாப் பெண்களுமே அம்பிகையின் வடிவம்தானே என்றேன்! என்றாள் அம்பிகை. பிறகு, சரி, சரி, உட்கார் முதலில் பசிதீரச் சாப்பிடு! என்று அம்பிகை திண்ணையிலேயே வாழையிலையை விரித்தாள். உணவு பரிமாறினாள். வள்ளலாருக்கு அன்று நல்ல பசி. அந்தப் பசிக்கு அந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது! அண்ணி! வழக்கத்தைவிட இன்று சாப்பாடு மிக ருசியாக இருக்கிறதே? இன்று யார் சமைத்தார்கள்? என்று கேட்டார் வள்ளலார். ஆமாம் தேவலோகத்திலிருந்து ஆள் வந்தார்கள் சமைக்க, போயேன். போய் கைகழுவு! பிறகு போய்ப் படுத்துத் தூங்கு என்ற அம்பிகை மெல்ல நடந்து மறைந்தாள். வள்ளலார் உணவின் சுவை பற்றி அதிசயத்தவாறே கை கழுவிவிட்டு உறங்கலானார். சற்று நேரத்தில் வீட்டுக் கதவு உள்ளிருந்து திறந்தது. வள்ளலாரின் உண்மையான அண்ணி வந்து அவரை எழுப்பினாள்.

என்ன இது, கதவைத் தட்டி என்னை எழுப்பக் கூடாதா? சாப்பிடாமலேயே தூங்குகிறாயே? என்று கோபித்துக் கொண்டாள். இப்போதுதானே சாப்பிட்டேன் அண்ணி! நீங்கள்தானே உணவு பரிமாறினீர்கள். சாப்பாடுகூட தேவாமிர்தமாக இருந்தது என்று உங்களிடம் இப்போதுதானே சொன்னேன்; அதற்குள் நீங்களே மறுபடி வீட்டுக்குள்ளிருந்து வருகிறீர்களே? என்று ஆச்சரியத்தோடு வினவினார் வள்ளலார். அதன்பிறகுதான் புரிந்தது-சற்றுமுன் வந்தது அண்ணி அல்ல; அம்பிகை என்பது. வள்ளலாருக்குத் தன்னை தெய்வம் கவனித்துக் கொள்ளும் என்ற மன உறுதி வந்தது அப்போதுதான் வள்ளலார் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அம்பிகையின் அருள் அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடத்த தினத்தன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக தம்பியை அனுப்பினார் சபாபதி.மகிழ்ச்சியுடன் சொன்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு, சபாபதி வியந்து போனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.ராமலிங்கமோ, தன் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும் மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்ப்த்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும் தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர். இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, வள்ளலார் என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார்.அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு ஜீவகாருண்ய உண்மை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையில் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்.

கன்னித் தமிழிலே அரசியல், பொருளாதாரம், சமூகம், மொழி, சமயம், தேசியம், சர்வ தேசியம், பக்தி, முக்தி ஆகிய அனைத்துத் துறைகளைப் பற்றியும், சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய தத்துவங்கள் பற்றியுமாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும், கீர்த்தனைகளும் பாடிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகாகவி. அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்ற வினா எழுந்த காலத்தில், மொழியறிவுக் கல்வி மட்டுமே அன்றி, மெய்ஞானக்கல்வி பெறவும் பெண்களுக்கு உரிமை உண்டு என்று பிரகடனம் செய்த பெரியார். இந்தியாவில் சகோதர அறம் நிலைநாட்டப்பெறல் வேண்டும் எனக் கூறி, முதன்முதலாக பாரத தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்த இந்திய தேசியவாதி. பாரத ஒருமைப்பாட்டின் அடிப்படையில் மனித குலத்தாரின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, சர்வதேச சகோதரத்துவத்தைத் தமிழருக்குப் போதித்த முதல் சர்வ தேசியவாதி.

பாரத தேசிய, சர்வ தேசிய ஒருமைப்பாடுகளின் அடிப்படையில் உயிர்க்குலத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் மந்திர மொழியைத் தந்த முதல்வர். ருஷ்ய நாட்டு பிளவட்ஸ்கியும், கேரளத்து சீர்திருத்தவாதி நாராயணகுருவும், தண்டபாணிசுவாமிகளும், மகாகவி பாரதியும் துதிபாடித் தொழுத துறவோன்! இத்தனை பன்முகச் சிறப்புகள் பெற்றவர் வள்ளலார். கந்தகோட்டம் முருகனின்மீது தெய்வ மணிமாலை பாடியவர். 1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்கு சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.