சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.
சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!
இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.