Powered By Blogger

17 டிசம்பர் 2012

அருணாசல சிவன்

செயசெய அருணாத்திரி சிவய நம ...
செயசெய அருணாத்திரி மசிவயந ...
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா ...
செயசெய அருணாத்திரி யநமசிவ ...

செயசெய அருணாத்திரி வயநமசி ...
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி ...
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து ...
அர கர சரணாத்திரி என உருகி ...
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை ...
சிவசிவ சரணாத் திரிசெய செயென ...
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக ...
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ ...
செயசெய சரணாத் திரி என முநிவர் கணம் ...
இது வினை காத்திடும் என மருவ ...
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா ...
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு ...
அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர் ...
சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே ...
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு ...
இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில் ...
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா ...
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத ...
குற மகள் முலை மேல் புது மணம் மருவி ...
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே. ...

அஜயஜெய அருணாசலா, சிவயநம,
அஜயஜெய அருணாசலா, மசிவயந,
அஜயஜெய அருணாசலா, நமசிவய, மூலப் பொருளே,
அஜயஜெய அருணாசலா, யநமசிவ,
அஜயஜெய அருணாசலா, வயநமசி,
அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து,
ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து,
ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து,
ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை
சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து,
திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக
அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ?
ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள்
இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட,
தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே,
திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும்
அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய
நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே,
ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு,
எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில்
திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே,
விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த
குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து,
சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.