Powered By Blogger

18 ஜூன் 2014

திருவாரூர் நான்மணி மாலை

குமரகுருபரர் அருளிச்செய்த
திருவாரூர் நான்மணி மாலை



காப்பு

    வெண்பா

    நாடுங் கமலேசர் நான்மணிமா லைக்குமிகப்
    பாடுங் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற
    முப்போ தகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும்
    கைப்போ தகத்தின் கழல்.
    1
    நூல்
    நேரிசை வெண்பா

    நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித்
    தேரூர்ந்த செல்வத் தியாகனே - ஆரூர
    வீதிவிடங் காவடங்கா வேலைவிடம் போலுமதிப்
    பாதிவிடங் காகடைக்கண் பார்த்து.
    2

    கட்டளைக் கலித்துறை

    பார்பெற்ற வல்லிக்குப் பாகீ ரதிக்குமெய்ப் பாதியுமத்
    தார்பெற்ற வேணியுந் தந்தார் தியாகர் தடம்புயத்தின்
    சீர்பெற்றி லேமென்று நாணால் வணங்கிச் சிலையெனவும்
    பேர்பெற்ற தாற்பொன் மலைகுனித் தாரெம் பிரானென்பரே.
    3

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    என்பாக நகுதலையோ டெழிலாக

    வணிந்தகம லேச மற்றுன்
    றன்பாக மிடப்பாகத் தலை஢விகரு
    விழிதோய்ந்துந் தலைவி பாகத்
    தன்பாக நின்றிருநோக் கவைதோய்ந்துக்
    திருநிறம்வே றாகை யாலப்
    பொன்பாக மிதுவெனவு நின்பாக
    மிதுவெனவும் புகலொ ணாதே
    4

    நேரிசை யாசிரியப்பா

    ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள்
    வெயில்கண் டறியா வீங்குருட் பிழம்பிற்
    புயல்கண் படுக்கும் பூந்தண் பொதும்பிற்
    காவலர்ப் பயந்து பாதபத் தொதுங்கிய

    இருவே றுருவிற் கருவிரன் மந்தி
    பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
    முன்னுறக் காண்டலு முளையெயி றிலங்க
    மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால்
    தொடுத்தபொற் சுளைபல வெடுத்துவாய் மடுப்பது

    மானிட மடங்க றூணிடைத் தோன்றி
    ஆடகப் பெயரி னவுணன்மார் பிடந்து
    நீடுபைங் குடரி னிணங்கவர்ந் துண்டென
    இறும்பூது பயக்கு நறும்பணை மருதத்
    தந்த ணாரூ ரெந்தையெம் பெரும

    சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற்
    கங்குலும் பகலுங் கலந்தினி திருந்தாங்
    கிடம்பலம் பொலிந்த விறைவியு நீயும்
    நடுவண் வைகு நாகிளங் குழவியை
    ஒருவரி நெருவி ருள்ளநெக் குருக

    இருவிருந் தனித்தனி யேந்தினிர் தழீஇ
    முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி
    உச்சி மோந்துமப் பச்சிளங் குழவி
    நாறுசெங் குமுதத் தேறலோ டொழுகும்
    எழுதாக் கிளவியி னேழிசை பழுத்த

    இழுமென் குரல மழலைத் தீஞ்சொற்
    சுவையமு துண்ணுஞ் செவிகளுக் கையவென்
    பொருளில் புன்மொழி போக்கி
    அருள்பெற வமைந்ததோ ரற்புத முடைத்தே.
    5

    நேரிசை வெண்பா

    தேங்குபுக ழாரூர்த் தியாகர்க்கெண் டிக்குமொளி
    வீங்கு பகற்போது வெண்படமாம் - தூங்கிருள்சூழ்
    கங்குற் பொழுது கரும்படமாஞ் செம்படமாம்
    பொங்குற்ற புன்மாலைப் போது.
    6

    கட்டளைக் கலித்துறை

    போதொன் றியதண் பொழிற்கம லேசர்பொன் மார்பிலெந்தாய்
    சூதொன்று கொங்கைச் சுவடொன்ப ராற்றெல் களிற்றுரிவை
    மீதொன் றுவகண்டு வெங்கோப மாமுகன் வெண்மருப்பால்
    ஈதொன் றடுகளி றென்றெதிர் பாய்ந்த விணைச்சுவடே
    7

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    இணங்குகம லாலயமா லிதயத்திற் பொலிந்ததியா கேச ரம்பொற்
    கணங்குழைமண் மகலளிதய கமலத்தும் பொலிதலினக் குமல மான
    மணங்கமழ்பங் கயத்தடஞ்சூழ் கமலைகம லாலயப்பேர் வாய்த்த தான்மற்
    றணங்கனையா ரிதயமுந்தம் மருட்கொழுந ரிதயமுமொன் றாகுந் தானே.
    8

    நேரிசை யாசிரியப்பா

    தானமால் களிறு மாநிதிக் குவையும்
    ஏனைய பிறவு மீகுந ரீக
    நலம்பா டின்றி நாண்டுறந் தொரீஇ
    இலம்பா டலைப்ப வேற்குந ரேற்க
    புரவலர் புரத்தலு மிரவல ரிரத்தலும்
    இருவே றியற்கையு மிவ்வுல குடைத்தே அதா அன்று
    ஒருகா லத்தி லுருவமற் றொன்றே
    இடப்பான் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
    வலப்பா லிரத்தன் மாநிலத் தின்றே
    விண்டொட நிவந்த வியன்றுகிற் கொடிகள்
    மண்டலம் போழ்ந்து மதியக டுடைப்ப
    வாணிலா வமுதம் வழங்கியக் கொடிகள்
    வேனிலிற் பயின்ற வெப்பம தாற்றுபு
    கொடியா ரெத்துணைக் கொடுமை செய்யினும்
    மதியார் செய்திடு முதவியை யுணர்த்தும்
    பன்பணி மாடப் பொன்மதிற் கமலைக்
    கடிநகர் வைப்பினிற் கண்டேம்
    வடிவ மற்றிது வாழிய பெரிதே.
    9

    நேரிசை வெண்பா

    பெருமான் றமிழ்க்கமலைப் பெம்மான்கைம் மானும்
    கருமா னுரியதளுங் கச்சும் - ஒருமானும்
    சங்கத் தடங்காதுந் தார்மார்புங் கண்டக்கால்
    அங்கத் தடங்கா தவா.
    10

    கட்டளைக் கலித்துறை.

    வாவியம் போருகஞ் சூழ்கம லேசர்புள் வாய்கிழித்த
    தூவியம் போருகந் தோறுநின் றோர்துணைத் தாளடைந்த
    ஆவியம் போருகந் தாயிரங் கூற்றுடன் றாலுமஞ்சேல்
    நாவியம் போருக நன்னெஞ்ச மேயவர் நாமங்களே.
    11

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    நாம வேற்படைக் கடவுளைப் பயந்தருள்

    நங்கைதென் கமலேசர்
    வாம பாகத்தைக் கொளவலப் பாகநீர்
    மங்கைகொண் டனள்போலாம்
    தாம நீற்றொளி தன்னிறங் காட்டவெண்
    டலைநிரை நுரைகாட்டக்
    காமர் பூங்கொடி மடந்தையர் மதர்விழிக்
    கயலுலா வரலாலே
    12

    நேரிசை யாசிரியாப்பா

    வருமுலை சுமந்து வாங்கிய நுசுப்பிற்
    புரிகுழன் மடந்தையர் பொன்னெடு மாடத்
    தொண்கதிர் வயிரமுந் தண்கதிர் நீலமும்
    சேயொளி பரப்புஞ் செம்மணிக் குழாமும்
    மாயிரு டுரந்து மழகதி ரெறிப்பச்
    சுரநதி முதல வரநதி மூன்றும்
    திருவநீண் மருகிற் செல்வது கடுப்ப
    ஒள்ளொளி ததும்பு மொண்டமிழ்க் கமலைத்
    தெள்ளமு துறைக்குந் திங்களங் கண்ணித்
    தீநிறக் கடவுணின் கான்முறை வணங்குதும்
    கூற்றெனப் பெயரிய கொடுந்தொழி னுளையன்
    ஊற்றமில் யாக்கை யுவர்நீர்க் கேணிப்
    புலத்தலை யுயிர்மீ னலைத்தனன் பிடிப்ப
    ஐவளி பித்தென வமைத்துவைத் திருந்த
    முத்தலைத் தூண்டி றூண்டி யத்தலை
    வாழ்நாண் மிதப்பு நோக்கித் தாழா
    தயிறலைத் தொடங்கி யெயிறலைத் திருத்தலிற்
    றள்ளா முயற்சி தவறுபட் டொழிந்தென
    வெள்குறீஇ மற்றவன் விம்மித னாக
    அருட்பெருங் கடலினவ வாருயிர் மீனம்
    கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும்
    பரமா னந்தத் திரையொடு முலாவி
    எய்தரும் பெருமித மெய்த
    ஐயநின் கடைக்க ணருளுதி யெனவே
    13

    நேரிசை வெண்பா

    என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
    முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
    புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
    மண்சுமந்தா ரென்றுருகு வர்.
    14

    கட்டளைக் கலித்துறை

    வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
    கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்
    சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப
    தரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே
    15

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வள்ளமுலைக் கலைமடந்தை மகிழ்நர்தலை மாலைசிர மாலை யாகக்
    கொள்ளுவது மலர்மடந்தை கொழுநர்தலை கிண்கிணியாக் கோத்துச் சாத்த
    உள்ளுவது மொழிவதுமற் றொழியாயே லடிமுடிகள் உணர்ந்தே மென்றே
    கள்ளமொழி வான்புகிற்றென் கமலேச லவர்க்கவையே கரியு மாமே.
    16

    நேரிசை யாசிரியப்பா

    கருந்தாது கடுத்த பெரும்பணை தாங்கும்
    படர்மருப் பெருமைபைங் குவளை குதட்டி
    மடிமடை திறந்து வழிந்தபா லருவி
    கரைபொரு தலைப்பப் பெருகுபூந் தடத்து
    வெண்டோ டவிழ்த்த முண்டகத் தவிசிற் ....(5)
    பானீர் பிரித்துண் டூவெள் ளெகினம்
    நூற்பெருங் கடலு ணுண்பொரு டெரித்து
    நாற்பயன் கொள்ளு நாமகட் பொருவும்
    மென்பான் மருதத் தண்புனற் கமலைத்
    தென்பான் மேருவிற் றிகழ்பூங் கோயில் .....(10)
    மூவ ரகண்ட மூர்த்தியென் றேத்தும்
    தேவ ரகண்ட தெய்வ நாயக
    நின்னடித் தொழும்பி னிலைமையின் றேனுநின்
    றன்னடித் தொழும்பர் சார்புபெற் றுய்தலிற்
    சிறியவென் விழுமந் தீர்ப்பது கடனென ......(15)
    அறியா யல்லை யறிந்துவைத் திருந்தும்
    தீரா வஞ்சத் தீப்பிறப் பலைப்பச்
    சோரா நின்றவென் றுயரொழித் தருள்கிலை
    புறக்கணித் திருந்ததை யன்றே குறித்திடிற்
    கோள்வாய் முனிவர் சாபநீர்ப் பிறந்த .....(20)
    தீவாய் வல்வினைத் தீப்பயன் கொண்மார்
    உடல்சுமந் துழலுமக் கடவுளர்க் கல்லதை
    பிறவியின் றுயர்நினக் கறிவரி தாகலின்
    அருளா தொழிந்தனை போலும்
    கருணையிற் பொலிந்த கண்ணுத லோயே. .....(25)
    17

    நேரிசை வெண்பா

    கண்ணனார் பொய்ச்சூள் கடிபிடித்தோ தென்புலத்தார்
    அண்ணலா ரஞ்சுவரென் றஞ்சியோ - விண்ணோர்
    விருந்தாடு மாரூரா மென்மலர்த்தா டூக்கா
    திருந்தாடு கின்றவா வென்.
    18

    கட்டளைக் கலித்துறை

    என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேயொ

    டேழுல கீன்றவன்னை
    மன்னுயிர்க் கொக்குங் கமலைப்
    பிரான்மணி கண்டங்கண்டு
    மின்னுயிர்க் கும்புய லென்றுமென்
    கொன்றைபைந் தாதுயிர்க்கப்
    பொன்னுயிர்க் கொண்கன் பொலன்றுகி
    லாமெந்தை பூந்துகிலே.
    19

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    பூமாதி னிதயகம லத்து வைகும்

    பொலிவானு மரியணைமேற் புணரி யீன்ற
    மாமாது வழிபடவீற் றிருத்த லானும்
    மறைமுதலு நடுமுதலு முடிவி னின்ற
    தாமாத றெளிவிப்பார் போலு நீலத்
    தரங்கநெடுங் கடன்ஞால மொருங்கு வாய்த்த
    கோமாது மனங்குழையக் குழைந்த வாரூர்க்
    குழகனார் கிண்கிணிக்கா லழக னாரே.
    20

    நேரிசை யாசிரியப்பா

    அழவிலர் சோதி முழுவெயி லெறிப்ப
    இளநில வெறிக்குங் குளிர்மதிக் குழவியும்
    வெஞ்சினம் பொதிந்த நஞ்சுமிழ் பகுவாய்
    வெள்ளைமுள் ளெயிற்றுப் பிள்ளைவா ளரவும்
    தெண்டிரை கொழிக்குந் தீம்புனற் கங்கைத் .....5
    தண்டுறை மருங்கிற் றனிவிளை யாட
    உடன்வைத் தாற்றிய படர்சடைக் கடவுள்
    எறுழ்வலித் தறுகட் டெறுசினக் கேழல்
    முளையெயி றிலங்க முருகுகொப் புளித்துத்
    தளையவி ழிதழித் தண்டார் மார்ப .....10
    திருவிழி யிரண்டிலு மிருசுடர் வழங்கலின்
    இரவுநன் பகலு மொருபுடை கிடந்தெனக்
    கடங்கலுழ் கரடத் தடங்களிற் றுரிவையும்
    மடங்கலீ ருரியு முடன்கிடந் தலமர
    விண்பட நிவந்த திண்பு யாசல .....15
    நெட்டிலைக் கமுகி னெடுங்கயி றார்த்துக்
    கட்டுபொன் னூசல் கன்னிய ராடவப்
    பைங்குலைக் கமுகு பழுக்காய் சிந்த
    வெண்கதிர் நித்திலம் வெடித்துகு தோற்றம்
    கந்தரத் தழகு கவர்ந்தன விவையென .....20
    அந்தி லாங்கவ ரார்த்தன ரலைப்ப
    ஒண்மிட றுடைந்தாங் குதிரஞ் சிந்தக்
    கண்முத் துகுத்துக் கலுழ்வது கடுக்கும்
    தண்டலை யுடுத்த வொண்டமிழ்க் கமலைப்
    பொற்பதி புரக்கு மற்புதக் கூத்தநின் .....25
    சேவடிக் கொன்றிது செப்புவன் கேண்மதி
    விலங்கினுண் மிக்கது விண்ணவர் தருவென
    ஒருங்குவைத் தெண்ணுவ தோர்வழக் கன்மையின்
    ஒத்த சாதியி னுயர்புமற் றிழிபும்
    வைத்தன ரல்லதை வகுத்தனர் யாரே .....30
    ஆருயிர்க் கமைத்த வோரெழு பிறப்பினுள்
    முற்படு தேவருண் முதல்வனென் றெடுத்துக்
    கற்பனை கடந்த கடவுணிற் பழிச்சும்
    தொன்மறைக் குலங்கள் முன்னிய தியாதெனப்
    பன்மறை தெரிப்பினும் பயன்கொள வரிதால் .....35
    தேவரி னொருவனென் றியாவரு மருளுற
    நீயே நின்னிலை நிகழாது மறைத்துக்
    கூறிய தாகு மாகலிற்
    றேறினர் மறையெனச் செப்பினர் நன்கே.
    21

    நேரிசை வெண்பா

    நல்லார் தொழுங்கமலை நாதனே நாதனெனக்
    கல்லாதார் சொல்லுங் கடாவிற்கு - வெல்லும்
    விடையே விடையாக மெய்யுணரா ரையுற்
    றிடையே மயங்குமிது வென்.
    22

    கட்டளைக் கலித்துறை

    இதுவே பொருளென் றெவரெவர் கூறினு மேற்பதெது
    அதுவே பொருளென் றறிந்துகொண் டேனப் பொருளெவர்க்கும்
    பொதுவே யென்றாலும் பொருந்து மெல்லோர்க்கும் பொதுவினிற்கும்
    மதுவே மலர்ப்பொழி லாரூரி னும்வைகும் வைகலுமே
    23

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வைய முழுது முழுதுண்ண வல்லாற் களித்து நவநிதியும்
    கையி லொருவற் களித்தெமக்கே கதிவீ டளித்தோர் கன்னிகைக்கு
    மெய்யி லொருகூ றளித்தனரால் விமலர் கமலைத் தியாகரென்ப
    தைய ரிவர்க்கே தகுமுகமன் அன்று புகழு மன்றாமே.
    24

    நேரிசை யாசிரியப்பா

    ஆமையோ டணிந்து தலையோ டேந்திக்
    காமரு மடந்தையர் கடைதொறுங் கடைதொறும்
    பலிதேர்ந் துண்ணினு முண்ணு மொலிகழற்
    பைந்துழாய் முகிலும் பழமறை விரிஞ்சனும்
    இந்திரா தியரு மிறைஞ்சினர் நிற்ப .....5
    மற்றவர் பதங்கள் மாற்றியும் வழங்கியும்
    பற்றலர்ச் செகுத்து முற்றவர்த் தாங்கியும்
    பரசுநர் பரசப் பணிகுநர் பணிய
    அரசுவீற் றிருப்பினு மிருக்கு முரைசெயும்
    யோக சாதனம் போகிகட் கின்மையிற் .....10
    செஞ்சடை விரித்து வெண்பொடி பூசி
    எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை
    இடப்பான் மடந்தை நொடிப்போழ்து தணப்பினும்
    மடலூர் குறிப்புத் தோன்ற விடலரும்
    காமமீ தூர வேமுற் றிரந்தவள் .....15
    தாமரைச் சீறடி தைவந் தம்ம
    புலவியிற் புலந்துங் கலவியில் களித்தும்
    போகமார்ந் திருப்பினு மிருக்கும் யோகிகட்
    கெய்தா வொண்பொருள் கைவந்து கிடைப்ப
    ஞான முத்திரை சாத்தி மோனமோ .....20
    டியோகுசெய் திருப்பினு மிருக்கு மீகெழு
    தமனிய மாடத் தரமிய முற்றத்
    தைங்கணைக் கிழவ னரசிய னடாத்தக்
    கொங்கைமால் களிறுங் கொலைக்கண்வாட் படையும்
    சில்கா ழல்குல் வெல்கொடித் தேரும் .....25
    பல்வகை யுறுப்பும் படையுறுப் பாகப்
    பவக்குறும் பெரியுந் தவக்குறும் பெறிந்து
    நுணங்கிய நுசுப்பி னணங்கனார் குழுமிக்
    கைவகுத் திருந்து கழங்கெறிந் தாட
    மையுண் கண்கள் மறிந்தெழுந் தலமரல் .....30
    செம்முகத் தாமரைச் சிறையளிக் குலங்கள்
    அம்மென் காந்தளி னளிக்குல மார்த்தெழக்
    கலந்துடன் றழீஇக் காமுற னிகர்க்கும்
    பொலன்செய் வீதிப் பொன்மதிற் கமலை
    அண்ணன் மாநகர்க் கண்ணுதற் கடவுள் .....35
    கற்பனை கழன்று நிற்றலின்
    நிற்பதிந் நிலையெனு நியமமோ வின்றே
    25

    நேரிசை வெண்பா

    இன்னீ ருலகத்துக் கின்னுயிர்யா மென்றுணர்த்தும்
    நன்னீர் வயற்கமலை நாதனார் - பொன்னார்ந்த
    சேவடிக்கா ளானார் சிலரன்றே தென்புலத்தார்
    கோவடிக்கா ளாகார் குலைந்து.
    26

    கட்டளைக் கலித்துறை

    குலைவத்த செவ்விள நீர்குளிர் பூம்பொழிற் கொம்புக்கின்ப
    முலைவைத்த தொக்குங் கமலேசர் வேணி முகிழ்நகைவெண்
    டலைவைத்த வேனற் புனமொக்குங் கங்கையத் தண்புனத்தில்
    நிலைவைத்த மாதரை யொக்குங் கவணொக்கு நீள்பிறையே.
    27

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    பிறையொழுக வொழுகுபுனற் கங்கை யாற்றின்
    பேரணையிற் றொடுத்துவிக்க பெரும்பாம் பென்னக்
    கறையொழுகும் படவரவம் படரும் வேணிக்
    கண்ணுதலார் கமலையிற்பைங் கமலை போல்வீர்
    நறையொழுகு மலர்ப்பொழில்குத் தகையாத் தந்தீர்
    நானிரண்டு மாவடுவு நாடிக் காணேன்
    நிறையொழுகு மிளநீரு நிற்கக் காணேன்
    நீர்செய்த காரியமென் னிகழ்த்து வேனே.
    28

    நேரிசை யாசிரியப்பா

    வேனிலா னுறுப்பின் மென்றசை யிறைச்சி
    தீநாக் கறியத் திருக்கண் டிறந்தோய்
    நான்மறை முனிவன் கான்முளை நிற்ப
    விடற்கரும் பாசமோ டுடற்பொறை நீங்க
    உயிருண் கூற்றுக்குத் திருவடி வைத்தோய் .....5
    கருங்கடல் வண்ணன் வெள்விடை யாகி
    அடிக டாங்கிய வுதவிக் காங்கவன்
    முழுவென்பு சுமந்த கழுமுட் படையோய்
    தேவா சிரயன் றிருக்கா வணத்து
    மேவா நின்ற விண்ணவர் குழாங்கள் .....10
    உதுத்திர கணங்களென் றோடினர் வணங்கி
    அருக்கிய முதல வகனமர்ந் தளிப்ப
    இத்தலத் துற்றவ ரினித்தலத் துறாரெனக்
    கைத்தலத் தேந்திய கனன்மழு வுறழும்
    மழுவுடைக் கைய ராகி விழுமிதின் .....15
    மாந்தர் யாவருங் காந்தியிற் பொலியும்
    வரமிகு கமலைத் திருநகர்ப் பொலிந்தோய்
    எழுதாக் கிளவிநின் மொழியெனப் படுதலின்
    நின்பெருந் தன்மை நீயே நவிற்றுதல்
    மன்பெரும் புலமைத் தன்றே யும்பரின் .....20
    நின்னோ ரன்னோ ரின்மையி னின்னிலை
    கூறாய் நீயெனிற் றேறுந ரிலரால்
    தன்னுடை யாற்றன் முன்னார் முன்னர்த்
    தற்புகழ் கிளவியுந் தகுமென் றம்ம
    நிற்புகழ்ந் திசைத்தனை நீயே யாக .....25
    இருடீர் காட்சிப் பொருடுணிந் துணர்த்தா
    தியங்கா மரபி னிதுவிது பொருளென
    மயங்கக் கூறுதல் மாண்புடைத் தன்றே
    அளவில் காட்சியை யையமின் றுணர்த்தலிற்
    றளரா நிலைமைத் தென்ப வென்றலிற் .....30
    றன்னுடை மயக்கந் திசைமேல் வைத்துச்
    சென்னெறி பிழைத்தோன் திசைமயங் கிற்றென
    மொழிகுவ தேய்ப்ப முதுக்குறை வின்மையிற்
    பழமறை மயங்கிற் றென்னா முழுவதும்
    எய்யா திசைக்குதும் போலும் .....35
    ஐயநின் றன்மை யளப்பரி தெமக்கே.
    29

    நேரிசை வெண்பா

    அள்ளற் கருஞ்சேற் றகன்பணைசூ ழாரூரர்
    வெள்ளப் புனற்சடைமேல் வெண்டிங்கள் - புள்ளுருவாய்
    நண்ணிலா தாரை நகைக்கு நகையையன்றே
    தண்ணிலா வென்னுஞ் சகம்.
    30

    கட்டளைக் கலித்துறை

    தண்மல ரும்பொழிற் றென்கம லேசர்க்குச் சாத்துகின்ற
    ஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலுமற் றோர்புலவன்
    பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்த
    கண்மலர் சாத்தியுங் காண்பரி தான கழன்மலரே.
    31

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    மல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும் வாம பாகத்
    தல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும் அமுத மான
    கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு மருவுருவாம் குணங்கண் மூன்றின்
    நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் நவில்கின் றாரே.
    32

    நேரிசை யாசிரியப்பா

    நவமணி குயின்ற நாஞ்சில்சூழ் கிடக்கும்
    உவளகங் கண்ணுற் றுவாக்கட லிஃதெனப்
    பருகுவா னமைந்த கருவிமா மழையும்
    செங்கண்மால் களிறுஞ் சென்றன படிய
    வெங்கண்வா ளுழவர் வேற்றுமை தெரியார் .....5
    வல்விலங் கிடுதலின் வல்விலங் கிதுவெனச்
    செல்விலங் கிடவெதிர் சென்றனர் பற்றக்
    காக பந்தரிற் கைந்நிமிர்த் தெழுந்து
    பாகொடு முலாவிப் படர்தரு தோற்றம்
    நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக் .....10
    கொடுபோ தந்த கொண்டலை நிகர்க்கும்
    சீர்கெழு கமலைத் திருநகர் புரக்கும்
    கார்திரண் டன்ன கறைமிடற் றண்ணல்
    மூவரென் றெண்ணநின் முதற்றொழில் பூண்டும்
    ஏவலிற் செய்துமென் றெண்ணா ராகி .....15
    அடங்கா வகந்தைக் கறிவெலாம் வழங்கி
    உடம்பு வேறா யுயிர்ப்பொறை சுமந்து
    நாளு நாளு நேடினர் திரிந்தும்
    காணா தொழிந்ததை நிற்க நாணா
    தியாவரு மிறைஞ்ச விறுமாப் பெய்துபு .....20
    தேவரென் றிருக்குஞ் சிலர்பிறர் தவத்தினும்
    மிகப்பெருந் தொண்ரொடிகலிமற் றுன்னொடும்
    பகைத்திறம் பூண்ட பதகனே யெனினும்
    நின்றிருப் பாத நேர்வரக் கண்டு
    பொன்றின னேனும் புகழ்பெற் றிருத்தலின் .....25
    இமையா முக்கணெந் தாய்க்கு
    நமனார் செய்த நற்றவம் பெரிதே.
    33

    நேரிசை வெண்பா

    நற்கரும்பு முக்கட் கரும்பென்னு நங்கைமீர்
    விற்கரும்பன் கைக்கரும்போ வேம்பென்னும் - சொற்கரும்பின்
    வாமக் கரும்பு மனைக்கரும்பா மாரூரர்
    காமக் கரும்புங் கரும்பு.
    34

    கட்டளைக் கலித்துறை

    கரும்புற்ற செந்நெல் வயற்கம லேசர்கண் டார்க்குமச்சம்
    தரும்புற்றி னிற்குடி கொண்டிருந் தாரது தானுமன்றி
    விரும்புற்று மாசுணப் பூணணிந் தார்வெவ் விடமுமுண்டார்
    சுரும்புற்ற கார்வரைத் தோகைபங் கான துணிவுகொண்டே.
    35

    எழுசீர்ச் சந்தவிருத்தம்

    கொண்டலை யலைத்தபல தண்டலை யுடுத்தழகு

    கொண்டக மலைப்ப தியுளார்க்
    கண்டபி னெனக்கிதழி தந்தன ரெனப்பசலை
    கண்டுயிர் தளிர்த்த மடவாள்
    அண்டரமு தொத்தவமு தந்தனை யிருட்கடுவி
    தன்பரருண் மிச்சில் கொலெனா
    உண்டிடு முளத்திலவ ருண்குவரென் மிச்சிலென
    உண்டதை மறுத்து மிழுமே.
    36

    நேரிசை யாசிரியப்பா

    உமிழ்தேன் பிலிற்று மொள்ளிணர்க் கூந்தல்
    அமிழ்துகு மழலை யம்மென் றீஞ்சொற்
    சில்லரித் தடங்கண் மெல்லிய லொருந்தி
    வரிசிலைத் தடக்கைக் குரிசின்மற் றொருவன்
    பொன்னெடு மார்பிற் பொலன்கல னிமைப்பத் .....5
    தன்னுருத் தோற்றந் தரிக்கலள் வெகுண்டு
    மாலா யினனென வணங்கின னிரத்தலிற்
    றோலா மொழியை வாழியை பெரிதெனப்
    புலந்தன ளெழுதலுங் கலங்கின் வெரீஇக்
    கண்மலர் சிவப்ப மெய்பசப் பெய்தலிற் .....10
    றானு மாலாந் தன்மையள் கொல்லெனத்
    தேரினன் றாழ்ந்து சிலம்படி திருத்திப்
    பஞ்சியிற் பொலிந்த குஞ்சிய னிரப்பக்
    கூடின ளல்லள் கூடா ளல்லள்
    கைம்மிகு சீற்றமுங் காதலு மலைப்ப .....15
    வெள்ளப் புண்ர்ச்சியின் வேட்கையுள் ளடக்கி
    உள்ளப் புணர்ச்சிய ளூடின ணிற்பது
    தாதவிழ் தெரியற் சாக்கியர் பெருமான்
    காதலுட் கிடப்பக் கல்லெறிந் தற்றே
    இத்திற மகளி ரிளைஞரோ டாடும் .....20
    நித்தில மாட நீண்மறு குடுத்த
    மைம்மா முகிறவழ் மணிமதிற் கமலைப்
    பெம்மா னருமைப் பெருமா ளாயினும்
    ஊனுண் வாழ்க்கைக் கானவர் குருசில்
    செஞ்சிலை சுமந்த கருமுகி லேய்ப்ப .....25
    உண்டுமிழ் தீநீ ருவந்தன ராடியும்
    விருப்படிக் கொண்ட மிச்சிலூன் மிசைந்தும்
    செருப்படிக் கடிகள் செம்மாந் திருந்தும்
    தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
    அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும் .....30
    நள்ளிருள் யாமத்து நாவலர் பெருமான்
    தள்ளாக் காத றணித்தற் கம்ம
    பரவை வாய்தலிற் பதமலர் சேப்ப
    ஒருகா லல்ல விருகா னடந்தும்
    எளியரி னெளிய ராயினர் .....35
    அளியர் போலு மன்பர்க டமக்கே.
    37

    நேரிசை வெண்பா

    தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
    செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி
    மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
    தானே குடைவேந் தனித்து.
    38

    கட்டளைக் கலித்துறை

    தன்னொக்குஞ் செல்வக் கமலைப்

    பிரான்செஞ் சடாடவிமற்
    றென்னொக்கு மென்னி னெரியொக்குங்
    கொன்றை யெரியிலிட்ட
    பொன்னொக்கும் வண்டு கரியொக்குங்
    கங்கையப் பொன்செய்விக்கும்
    மின்னொக்கும் பொன்செய் கிழக்கொல்ல
    னொக்குமவ் வெண்பிறையே
    39

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வெண்ணிலவு கொழித்தெறிக்குஞ் செஞ்சடைமோ

    லியர்வீதி விடங்க ராரூர்க்
    கண்ணுதல்பொற் புயவரைசேர் தனவரைக
    ளிரண்டவற்றுட் கனக மேரு
    அண்ணல்புய வரைக்குடைந்து குழைந்துதலை
    வணங்கிடுநம் அன்னை பார
    வண்ணமுலைத் தடவரையவ் வரைகுழயப்
    பொருவதல்லால் வணங்கி டாதே.
    40

    நேரிசை யாசிரியப்பா

    வண்டுகூட் டுண்ண நுண்டுளி பிலிற்றித்
    தண்டே னுறைக்குந் தடமலர்ப் பொதும்பரின்
    விழுக்குலை தெறிப்ப விட்புலத் தவர்க்குப்
    பழுக்காய் தூக்கும் பச்சிளங் கமுகிற்
    செடிபடு முல்லைக் கொடிபடர்ந் தேறித் .....5
    தலைவிரித் தன்ன கிளைதொறும் பணைத்து
    மறிந்துகீழ் விழுந்தந் நறுந்துணர்க் கொடிகள்
    நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்து
    தாற்றிளங் கதலித் தண்டினிற் படரவப்
    பைங்குலைக் கமுகிற் படர்சிறை விரித்தொரு .....10
    கண்செய் கூந்தற் களிமயி னடிப்ப
    நெடுந்தாண் மந்திகள் குடங்கையிற் றூக்கி
    முட்புறக் கனிக டாக்கக் கொட்புறும்
    வானர மொன்று வருக்கைத் தீங்கனி
    தானெடுத் தேந்துபு தலைமேற் கொண்டு .....15
    மந்திக டொடர மருண்டுமற் றந்தப்
    பைந்துணர்க் கொடியிற் படர்தரு தொற்றம்
    வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும்பெருங் கம்பத்
    தணங்கனா ளொருத்தி யாடின ணிற்பப்
    பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக் .....20
    குடந்தலைக் கொண்டொரு கூன்கழைக் கூத்தன்
    வடந்தனி னடக்கும் வண்ணம தேய்க்கும்
    பூம்பணை மருதத் தீம்புனற் கமலைத்
    திருநகர் புரக்குங் கருணையங் கடவுள்
    அன்பெனு மந்தரத் தாசை நாண் பிணித்து .....25
    வண்டுழாய் முகுந்தன் மதித்தனன் வருந்த
    அருட்பெருங் கடலிற் றொன்றி விருப்பொடும்
    இந்திரன் வேண்ட வும்பர்நாட் டெய்தி
    அந்தமி றிருவொடு மரசவற் குதவி
    ஒருகோ லோச்சி யிருநிலம் புரப்பான் .....30
    திசைதிசை யுருட்டுந் திகிரியன் சென்ற
    முசுகுந் தனுக்கு முன்னின் றாங்குப்
    பொன்னுல கிழிந்து புடவியிற் றோன்றி
    மன்னுயிர்க் கின்னருள் வழங்குதும் யாமென
    மேவர வழங்குமான் மன்ற .....35
    யாவரு நமர்கா ளிறைஞ்சுமின் னீரே.